ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு டெலிவரி: ஸ்விக்கி ஊழியரின் அர்ப்பணிப்பைக் கலாய்த்த நெட்டிசன்கள்
Published : 20 Feb 2019 11:10 IST
ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு உணவு டெலிவரி செய்ய முயன்ற ஸ்விக்கி ஊழியரின் அர்ப்பணிப்பை நெட்டிசன்கள் கலாய்த்துவருகின்றனர்.
மாறிவரும் இணைய உலகில், ஆன்லைன் வர்த்தகம் இன்றியமையாததாக மாறிவிட்டது. தலைக்கு ஷாம்பு முதல் காலுக்கு செருப்பு வரை அனைத்துமே ஆன்லைனில் கிடைக்கின்றன. உணவும் இதில் விதிவிலக்கில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்து ஆர்டர் செய்தால், வீடு தேடி பொருட்கள் வருவது இன்றைய தலைமுறையை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. இதனால் ஆன்லைன் சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்துவருகிறது.
பிரபல உணவகங்கள், தங்களின் உணவுகளை ஆன்லைனில் விற்பனை செய்தாலும், அனைத்து உணவகங்களின் உணவுகளையும் ஆன்லைனில் விற்பனை செய்யும் ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் ஈட்ஸ் மற்றும் ஃபுட்பாண்டா ஆகிய விற்பனை நிறுவனங்கள் அபார வளர்ச்சியடைந்துள்ளன.
இதில் முன்னணியில் திகழும் ஸ்விக்கி ஊழியர் செய்த கலாட்டா, சமூக வலைதளங்களில் வைரலானது. பார்கவ் ராஜன் என்னும் பெங்களூருவாசி, அங்குள்ள உணவகம் ஒன்றில் ஸ்விக்கி மூலம் ஆர்டர் செய்துள்ளார்.
அதேபெயரில் ராஜஸ்தானில் உள்ள உணவகம் ஒன்றில் தவறுதலாக ஆர்டர் பதிவாகியுள்ளது. ஆர்டரை ரத்து செய்ய முயன்ற பார்கவ், ராஜஸ்தானில் இருந்து பெங்களூருவுக்கு ஸிவிக்கி டெலிவரி பாய் வருவதாக மேப் செய்யப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தார். பிரபாகரன் என்பவர் உணவை டெலிவரி செய்வார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தார் பார்கவ். ''வாவ் ஸ்விக்கி, என்ன அற்புதமாய் வண்டி ஓட்டுகிறீர்கள்?'' என்று ட்விட்டரில் பதிவிட்டார். இந்தப் பதிவைப் பகிர்ந்த நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கினர்.
இதற்கு பதிலளித்த ஸ்விக்கி, ''இதுபோன்ற தவறுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்கப்படும். தவறைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment