Sunday, February 10, 2019


சாதாரண மறதி vs அல்ஸைமர் மறதி! - 5 வித்தியாசங்கள்








"உங்க பேர் என்ன?"



உலகிலேயே ரொம்ப ஈஸியான கேள்வி இதுதான். ஆனால் இதற்கு கூட பதில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் அல்ஸைமர் எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நோயாளிகள், சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் சாப்பாடு கேட்பார்கள். சமீபத்திய நிகழ்வுகளின் நினைவுகள் மறந்துவிடும். தன் வீட்டில் இருந்துகொண்டே என் வீட்டுக்குப் புறப்படுகிறேன் என, அடிக்கடி வீட்டைவிட்டுப் போய்விடுவார்கள் வீட்டைவிட்டு வெளியேறினால், மீண்டும் திரும்பிவரத் தெரியாது. ஒன் பாத்ரூம், டூ பாத்ரூம் எங்கே போவது என்றுகூடத் தெரியாது. கோர்வையாகப் பேச வராது. சொல்வதைப் புரிந்துகொள்ள முடியாது. ஒரு கட்டத்தில், தன் பெயர் கூட மறந்துவிடலாம். மனிதன் என்று சொல்வதற்கான சாராம்சங்களே நொறுங்கிப்போய்விடும். இப்படி ஒருவர் இருந்தால், அவருக்கு வந்திருக்கும் நோயின் பெயர்தான், அல்ஸைமர் எனும் மூளை மழுங்கு நோய். இது, ஞாபக மறதி நோயின் (டிமென்ஷியா) ஒரு முக்கிய வகை என்கிறார், மனநல மருத்துவர் செந்தில்வேலன்.

ஜெர்மனியைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் மற்றும் உளவியலாளர் அலாய்ஸ் அல்ஸைமர் (Alois Alzheimer), 1907-ம் ஆண்டு, நினைவாற்றல் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ச்சிசெய்து, மூளையில் ஏற்படும் தேய்மானத்தைக் கண்டறிந்தார். இதனால், மூளையின் பதிவுத்திறன் குறைந்து, புதிய தகவல்களைப் பதியாது. அதனால், தேவைப்படும்போது அந்தத் தகவல்கள் நினைவுக்கு வருவதில்லை. மூளையில் உள்ள நரம்பு செல்கள், வழக்கமாகத் தங்களுக்குள் ஏற்படுத்தும் தகவல்தொடர்புகளைத் தேவையற்ற கெட்ட புரதங்கள் அடைத்துக்கொள்வதையும் , இதனால் தகவல் பரிமாற்றம் மூளையில் தடைபடும் என்பதையும் கண்டறிந்தார். இந்த நோய், 65 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தாக்குகிறது. சில சமயங்களில் 45 - 50 வயதினரைக்கூட தாக்கும். இந்தியாவில் சுமார் 41 லட்சத்துக்கும் மேற்பட்ட அல்ஸைமர் நோயாளிகள் உள்ளனர். இது, ஆண்- பெண் இருபாலருக்கும் வரலாம். வயோதிகம் மட்டுமல்லாமல் மரபுரீதியாகவும், தலையில் பலமாக அடிபடுதல் காரணமாகவும், டவுண் சின்ட்ரோம் என்னும் நோயின் காரணமாகவும் அல்ஸைமர் வரலாம்.

அல்ஸைமரால் பாதிப்புகள்: தற்கால நினைவுகள் மறந்துவிடும். சிந்திக்கும் திறன், செயல்களைத் திட்டமிட்டு வரிசையாகச் செய்யும் திறன், முடிவெடுக்குக் திறன், அன்றாட வாழ்வியல் பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி அனைத்தும் பாதித்துவிடும். வழக்கமான குணாதிசயம் மாறி, ஆளுமைத் தன்மையே ஒழிந்துவிடும். மொழி, பழக்க வழக்கங்கள் அத்தனையும் சிதைந்துவிடும்.

இதைப் படிக்கும்போதே என்னென்ன பொருட்களை மறந்துபோனோம்? நமக்கு இந்த நோயோ என்று அச்சப்பட வேண்டாம்.

சாதாரண மறதி: ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்வதாலும், ஒன்றை மனதுக்குள் சரியாக உள்வாங்காமலோ, மனப் பதட்டத்துடனோ ஒரு வேலையைச் செய்வதாலும் ஏற்படும் மறதிகள். அதாவது...

1. பேனா, சாவி போன்ற பொருள்களை எங்கே வைத்தோம் எனத் தேடுதல்.
2. சில வாரங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியின் தேதி நினைவுக்கு வராமை.
3. பாக்கெட்டில் கண்ணாடியை வைத்துக்கொண்டு வேற இடத்தில் தேடுதல்.
4. எடுத்துப்போக வேண்டிய ஒரு பொருளை எடுக்காமல் போய்விடுதல்.
5. பஸ் நம்பர், கடை பெயர் மறந்துவிடுதல்.


அல்ஸைமர் மறதி: தினசரி வாழ்க்கையில் தனக்கு வேரொருவரின் உதவி தேவைப்படும் நிலை வந்துவிட்டால் வரும் மறதிகளான

1. சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்வது.
2. கையில் இருக்கும் வேட்டியை இடுப்பில் கட்டத்தெரியாமல் கழுத்தில் சுற்றிக்கொள்வது.
3. சூழ்நிலைக்குப் பொருந்தாத அழுகை, சிரிப்பு.
4. இவங்க யார் எனக் கேட்டால், தன் மனைவியையே 'பக்கத்துவீட்டுப் பொண்ணு' என்று சொல்லுதல்.
5. பகலா இரவா... என்பதில் குழப்பம்.

அல்ஸைமருக்கு என்ன சிகிச்சை?

இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. ஆனால், மூளைத் தேய்மானத்தின் வேகத்தைக்குறைத்து, ஆயுளை நீட்டிக்கலாம். ஞாபக மறதி, குணக்கோளாறுகள் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஓரளவு சரிசெய்யலாம். இந்த நோயை முற்றிலும் குணமாக்க, ஸ்டெம்செல் தெரபி ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தொடர்ந்து படித்தல், அறிவுபூர்வமான விவாதங்களில் ஈடுபடுதல், ஞாபக சக்தியைத் தூண்டும் விளையாட்டுக்களில் ஈடுபடுதல் போன்றவற்றால் அல்ஸைமர் நோயை வராமல் தடுக்கலாம்.

- கே.ஆர்.ராஜமாணிக்கம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024