Thursday, April 18, 2019

'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்துக்கு விஜய் மல்லையா அனுதாபம்

Added : ஏப் 17, 2019 22:04

புதுடில்லி,கடன் சுமையில் தத்தளிக்கும், 'ஜெட் ஏர்வேஸ்' விமான நிறுவனத்துக்கு, அதன் போட்டி நிறுவனமாக இருந்த, 'கிங் பிஷர்' விமான நிறுவன உரிமையாளர், விஜய் மல்லையா அனுதாபம் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவை சேர்ந்த, விஜய் மல்லையா, கிங் பிஷர் விமான நிறுவனம் துவங்க, பொதுத் துறை வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு தப்பியோடினான்.இது தொடர்பான வழக்கில், மல்லையாவை, இந்தியாவுக்கு அழைத்து வர, லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மல்லையாவை, நம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே, கடன் சுமையில் தத்தளிக்கும், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாததால், விமான சேவைகளை ரத்து செய்து வருகிறது.கிங் பிஷர் நிறுவனத்துக்கு போட்டியாக இருந்த, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் வீழ்ச்சியை அறிந்த மல்லையா, டுவிட்டர் மூலம், ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன உரிமையாளர், நரேஷ் கோயலுக்கு அனுதாபம் தெரிவித்துஉள்ளான்.

மேலும், அதில் அவன் கூறியிருப்பதாவது:கிங் பிஷர் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் இருந்தது. தற்போது, அதன் நிலையை அறியும் போது, மிகவும் வருத்தமாக உள்ளது. அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்களுக்கு இடையே, வங்கிகள் பாரபட்சம் காட்டுகின்றன.'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 35 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை செலுத்த, மத்திய அரசு உதவியது. ஆனால், தனியார் விமான நிறுவனங்களுக்கு உதவி செய்வதில்லை. பொதுத் துறை வங்கிகளாக இருந்தாலும், பாகுபாடின்றி செயல்பட வேண்டும்.இவ்வாறு, அதில் அவன் கூறியுள்ளான்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024