Thursday, April 18, 2019

தலையங்கம்

ஓட்டுபோடுவது ஜனநாயக கடமை



இந்திய ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்காக மக்களுடைய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் உன்னதமான போற்றுதலுக்குரிய ஒன்றாகும். அதனால்தான் இந்திய ஜனநாயகத்தை உலகில் ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைக்கிறார்கள்.

ஏப்ரல் 18 2019, 03:30

இந்திய அரசியல் சட்டப்படி, நாடு முழுவதிலும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்காக நடக்கும் தேர்தலில் பெரும்பான்மை இடத்தைப்பெறும் கட்சி மத்திய அரசாங்கத்தையும், மாநிலங்களிலுள்ள சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான இடத்தைப்பெறும் கட்சி மாநிலத்தில் அரசாங்கம் நடத்தும் உரிமையையும் பெறுகிறது. அமெரிக்க அரசியல் சிந்தனையாளர்களில் முக்கியத்துவம் வாய்ந்த தாமஸ் ஜெபர்சன் கூறியதுபோல, அரசாங்கம் என்பது பெரும்பான்மையின் அரசாங்கம் அல்ல. வாக்களிப்பவர்களில் பெரும்பான்மையினரின் அரசாங்கம் ஆகும். அந்தவகையில், கடந்த 2014–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் 81 கோடியே 45 லட்சம் வாக்காளர்கள் இருந்தநிலையில், 66.40 சதவீதம் பேர்தான் வாக்களித்திருக்கிறார்கள். இது இதுவரையில் இல்லாத அளவு இருந்த ஒரு அதிகப்படியான வாக்குசதவீதம் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் 73.74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

தற்போது இந்தியா முழுவதும் ஏறத்தாழ 90 கோடிபேர் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், வேலூரில் நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்யப்பட்டதை கழித்து, இன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும், தமிழ்நாட்டில் 18 சட்டசபைகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. தமிழ்நாட்டில் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 ஆண்கள், 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேர் பெண்கள். 5,790 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார்கள். இந்தத்தேர்தல் என்பது தமிழ்நாட்டில் மிகமிக முக்கியமான தேர்தலாகும். மத்தியில் யார் ஆளவேண்டும் என்பதற்கான பதிலை கொடுப்பதும், தமிழ்நாட்டில் தொடர்ந்து அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கவேண்டுமா? என்பதற்கான முடிவை தெரிவிக்கும் தேர்தல் இது. பொதுவாக தேர்தலின்போது மொத்த வாக்காளர்களில் கணிசமான எண்ணிக்கையினர் ஓட்டுபோடாமல் இருந்துவிடுகிறார்கள். ஓட்டுபோட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தேர்வு செய்த ஆட்சிதான் நடக்கிறது. ஓட்டு போடாத அவர்கள் என்ன மனநிலையில் இருந்தார்கள்? என்பது தேர்தல் முடிவில் பிரதிபலிப்பதில்லை.

அடால்ப் ஹிட்லர் ஒருமுறை, ‘‘வெற்றி பெற்றவர்களை நான் விரும்புகிறேன். தோல்வி அடைந்தவர்களையும் நான் விரும்புகிறேன். ஆனால், வெறுமனே விளையாட்டை பார்ப்பவர்களை நான் வெறுக்கிறேன்’’ என்று கூறினார். எனவே, தேர்தலில் ஓட்டுபோடாமல் இருந்துவிட்டு ஒரு அரசாங்கம் அமைந்தபிறகு அது சரியில்லை, இது சரியில்லை என்று கருத்து கூறுவதற்கு ஓட்டுபோடாதவர்களுக்கு தகுதியே இல்லை. உலகில் சில நாடுகளில் ஓட்டுபோடுவது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓட்டுபோடாதவர்களுக்கு தண்டனையும் உண்டு. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை என்றாலும், வாக்காளர்கள் அனைவரும் இன்று வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுபோடுவது ஜனநாயக கடமையாகும். அந்தவகையில், கடந்த தேர்தலில் எப்படி அகில இந்திய சராசரியைவிட தமிழக மக்கள் அதிக அளவில் வாக்களித்தார்களோ, அதுபோல இந்தியாவிலேயே அதிக சதவீதத்தில் வாக்களித்தவர்கள் தமிழக மக்கள்தான் என்ற பெருமையை பெற, அடுத்த 5 ஆண்டுகள் மத்தியில் யார் தங்களை ஆளவேண்டும், மாநிலத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டுமா? என்பதையும் முடிவு செய்வதற்காக தமிழக மக்கள் அனைவரும் இன்று வாக்களிக்க செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024