தேர்தல் நடத்தை நெறிமுறைகள் மே 27 வரை அமலில் இருக்கும்: தலைமைத் தேர்தல் அதிகாரி
By DIN | Published on : 14th May 2019 04:20 AM |
தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் வரும் 27-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்காக கடந்த மார்ச் 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.
வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 19-இல் நடக்கவுள்ளது.
இதைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 23-இல் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிந்தாலும், இந்த தேர்தல் நடத்தை நெறிமுறைகள் வரும் 27-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் வரும் 27-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
No comments:
Post a Comment