அச்சுறுத்துகிறது போதை பீதி!
By ஆசிரியர் | Published on : 10th May 2019 03:08 AM
இத்தனை நாளும் மதுப் பழக்கத்தால்தான் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது பொள்ளாச்சியிலும், மாமல்லபுரத்திலும் காவல் துறையினரால் நடத்தப்பட்ட சோதனை. மிகப் பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் போதை மருந்துப் பழக்கம் அதிகரித்து வருவது அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் சொகுசு ஓய்வு விடுதியில் (ரிசார்ட்) கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின்போது அங்கே இளைஞர்களின் உல்லாச விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 160-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பல்வேறு போதைப் பொருள்களுடன் சனி, ஞாயிறு வார விடுப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இவர்களில் 112 பேர் கஞ்சா, அபின், கோகைன், போதை மாத்திரைகள், போதை மருந்து உள்ளிட்டவையின் போதையில் காணப்பட்டனர்.
போதை மருந்து உல்லாசத்தில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞர்களில் பெரும்பாலோர் கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் கேரளத்தைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் அனைவரும் சமூக ஊடகங்களின் மூலம் போதை மருந்துகளுக்காக இணைக்கப்பட்டிருப்பவர்கள். ஒவ்வொரு வாரக் கடைசியிலும் இதுபோல இளைஞர்கள் 24 மணிநேர போதை விருந்துகளுக்கு சமூக ஊடகக் குழுக்கள் மூலம் இணைகிறார்கள். ஒவ்வொரு மாணவரும் நுழைவுக் கட்டணமாக ரூ.1,200 செலுத்துகிறார்கள்.
சோதனை நடத்தப்பட்ட தனியார் சொகுசு ஓய்வு விடுதி எந்தவித உரிமமோ, அனுமதியோ பெறாமல் நடத்தப்பட்டு வந்தது அப்போதுதான் தெரியவந்தது. காவல் துறையினருக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தெரியாமல் சொகுசு ஓய்வு விடுதி நடத்திவிட முடியும் என்பதேகூட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
விடுதி உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 14 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 28 வயது ரஷியர் ஒருவரும் அடக்கம். அந்த மாணவர்களுக்கு, அவர்களுக்குத் தேவைப்படும் போதைப் பொருள்களை விற்பனை செய்வது அந்த ரஷியர்தான் என்று கூறப்படுகிறது. இதுபோல, கோவை மாநகரத்தைச் சுற்றி எத்தனை விடுதிகள் செயல்படுகின்றன, போதை விருந்துக்காக எத்தனை சமூக ஊடகக் குழுக்கள் இருக்கின்றன, அவற்றில் தொடர்புடைய இளைஞர்களின் எண்ணிக்கைதான் எவ்வளவு என்பன குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டால் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரக்கூடும்.
கோவையில் மட்டும்தான் அப்படி என்று ஒதுக்கிவிட முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது கடந்த திங்கள்கிழமை அன்று சென்னை மாமல்லபுரத்தில் சோதனையில் பிடிபட்ட சட்டவிரோதமான போதை விருந்து. மாமல்லபுரத்திலுள்ள மூன்று நட்சத்திர விடுதி ஒன்றில் காவல் துறையினர் திங்கள்கிழமை அதிகாலை வேளையில் நடத்திய சோதனையில் பொள்ளாச்சியைப் போலவே போதையில் மிதக்கும் 160 இளைஞர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். காவல் துறையின் வலையில் அகப்பட்டவர்களில் வெளிநாட்டவர் ஒருவரும், 7 பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரம் போதை விருந்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அனைவருமே 18 முதல் 25 வயதுப் பிரிவினர். பொள்ளாச்சியில் போதை விருந்துக்கு நுழைவுக் கட்டணம் ரூ.1,200 என்றால், அதுவே மாமல்லபுரத்தில் ரூ.3,000. போதை விருந்தில் ஈடுபட்டவர்களிடமிருந்து மது புட்டிகள், கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்கள், எல்.எஸ்.டி. எனப்படும் போதை மருந்து, போதை மாத்திரைகள், கோகைன், மரிஜ்வானா போன்றவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
பொள்ளாச்சியைப் போலவே மாமல்லபுரம் போதை விருந்தும் சமூக ஊடகக் குழுக்கள் மூலம்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் கலந்துகொண்ட இளைஞர்கள் அனைவரும் சென்னையிலுள்ள பல பிரபல கல்லூரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர். இவர்களில் 25 பேர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என்றால், 31 பேர் மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பொறியியல் கல்லூரி மாணவர்கள்.
இதுவரை இந்தியாவிலேயே பஞ்சாபிலும் தில்லியிலும்தான் மிக அதிகமான அளவில் இளைஞர்கள் மத்தியில் மது அல்லாத ஏனைய போதை மருந்துப் பழக்கங்கள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. பஞ்சாபில் ஆண்டுதோறும் சுமார் ரூ.7,500 கோடி அளவில் போதை மருந்து விற்பனை நடைபெறுவதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஓர் ஆய்வு தெரிவித்தது. அந்த ஆய்வின்படி, பஞ்சாபில் 2.3 லட்சம் பேர் அபின் அடிமைகளாகவும், 1.23 லட்சம் பேர் ஹெராயின் என்கிற போதைமருந்துக்கு அடிமைகளாகவும் இருப்பதாகக் கூறப்பட்டது.
பொள்ளாச்சியும் மாமல்லபுரமும் தெரிவிக்கும் தகவல் என்னவென்றால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபில் காணப்பட்ட நிலைமை இன்று இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் பரவி வருகிறது என்பதுதான். பொள்ளாச்சியும் மாமல்லபுரமும் ஏதோ விதிவிலக்குகள் அல்ல. அவற்றை ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாகத்தான் நாம் காண வேண்டும்.
தமிழகத்தின் நகர்ப்புறங்களில் மட்டும்தானா இளைஞர்கள் மத்தியில் போதை மருந்து பாதிப்பு காணப்படுகிறது, இல்லை, சிறுநகர் பகுதிகள் வரை பரவிவிட்டிருக்கிறதா என்பது குறித்து உடனடியாகத் தீவிர ஆய்வு நடத்தியாக வேண்டும். இணையதள போதை மருந்துக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு, போதை மருந்துக்கு அடிமையாகி இருக்கும் இளைஞர் கூட்டத்தை மீட்பதற்கான போர்க்கால நடவடிக்கையை அரசும், கல்லூரிகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முடுக்கிவிட்டாக வேண்டும்!
No comments:
Post a Comment