Saturday, September 21, 2019

இரண்டு பாதுஷாக்களும் இன்னிசை தான்சேனும் 01: ஓர் இசைச் சாரதியின் கதை! 

'

புதிய பறவை' பாடல் காட்சி...

தமிழ்த் திரையுலகம் எப்போதுமே மூன்றெழுத்துக்களை மையமாக வைத்து இயங்குவது எழுதப்படாத விதி. சிவாஜி - எம்.ஜி.ஆர், கமல் - ரஜினி, அஜித் - விஜய் என மூன்றெழுத்தே மூச்சாகிப்போன படவுலகம் தமிழ் சினிமா. அதில் ஒரு பெரும் பொற்காலத்தின் திரை இசை சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாகக் கோலோச்சிய இன்னொரு மூன்றெழுத்து எம்.எஸ்.வி.

இசை மகாமேதை தான்சேன், ஒரு பாதுஷாவுக்கு நிழலாகவும் உயிராகவும் இந்துஸ்தானி இசைக்கு அடையாளமாகவும் வாழ்ந்து மறைந்தார்.


இயல்பாகவே உலக இசை வடிவங்களை மெய் மறக்கச் செய்யும் மெல்லிசையாக வழங்கிய இன்னொரு திரையுலக தான்சேன் என மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை வருணிக்கலாம். திரை நடிப்பின் இலக்கணம் வகுத்த ஒரு பாதுஷாவுக்கும் திரை வழியே மக்களுக்கான அரசியலைக் கட்ட முயன்ற மற்றொரு பாதுஷாவுக்கும் அவர்களை சாமானிய மக்கள் மத்தியில் விரைந்து பிரபலப்படுத்திய திரையிசையின் நாடித் துடிப்பாக வாழ்ந்த கதையைப் பார்க்கப் போகிறோம்.

‘மெல்லிசை மன்னர்களா’க விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை, காலத்தை வென்ற பல பாடல்களைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் பிரிந்தபின், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் தனிப் பயணம் உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் சந்திக்காத சவால்கள் நிறைந்த வரலாறு. தமிழ்த் திரையில் விஸ்வரூபம் எடுத்து நின்ற இரு பெரும் துருவ நட்சத்திரங்களுக்கு அவர்களின் பின்னணியில் நீலவானமாக விஸ்வ ‘நாதம்’ நிறைந்து நின்றார். அந்தப் பின்னணியின் வீரியம் புரிய வேண்டும் என்பதற்காக முதலில் எம்.எஸ்.வியிடம் இருந்து சற்றே விலகிச் சென்று பின்னர் அவருடன் சேர்ந்துகொள்வோம்.

இரு லகான்கள்

திரையுலகைக் கரைத்துக் குடித்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் திரையுலகில் நடிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்காதவர் சிவாஜி. மிகவும் டைட்டான குளோசப் காட்சிகளில் நடிகர் திலகத்தின் புருவம்கூடத் துடிக்கும், நடிக்கும். ஆனால், எம்.ஜி.ஆரோ திரைப்படத் தயாரிப்பின் அத்தனை பிரிவுகளிலும் வலிய நுழைந்து பிரகாசித்து வெற்றிக்கொடி நாட்டிய மிகச் சிறந்த டெக்னீசியன்கூட.

இருவருக்குமே கலையுலக சாதனைகளோடு அரசியல் வெற்றிக்கனியின் மீதும் ஆசை இருந்தது. நடிப்புக்கு என்று தனி இலக்கணம் எழுதிய நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படமும் அவரைத் தமிழக மக்களின் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, காதலனாக, மகனாக குடும்ப உறவு சொல்லிக் கொண்டாட வைத்தது.

ஆனால், எம்.ஜி.ஆருக்கோ இதைத் தாண்டி அவரது வசனங்களும் பாடல்களும் அரசியல் களத்தின் அதிர்வேட்டுகளாகவே கொண்டாடப்பட்டன. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அவர் பிரிந்த பிறகு ஒரு தனி இயக்கம் தொடங்கி, அதை வெற்றிகரமாக அரசியல் வானில் பறக்கவிட வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது.


தனது அரசியல் வெற்றிக்கு ஆணிவேராகத் தன் திரைப்படங்களை சாமர்த்தியமாக நகர்த்திச் சென்றார் அவர். இப்படிப்பட்ட போர்க்களத்தில் மிக வித்தியாசமான வகையில் எதிரெதிர் முகாம்களின் இரண்டு வெற்றிக் குதிரைகளின் லகான்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசைச் சாரதியின் கைகளில் இருந்தன.

சில ‘பளிச்’ உதாரணங்கள்

விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மட்டுமே தமிழ்த் திரையுலகை முழுமையாக ஆட்சி செய்தார். ஆனால், அந்த ஆட்சி இந்த இரு பெரும் நட்சத்திரங்களின் எதிர்பார்ப்புகளை மிகப் பெரிய அளவில் ஈடுசெய்ய வேண்டியதாகவும் அதே நேரத்தில் கே.பாலசந்தர், ஸ்ரீதர் போன்ற ஜாம்பவான் இயக்குநர்களின் சவால்கள் நிறைந்த கதைச் சூழல்களுக்குப் பதிலளிக்க வேண்டியதாகவும் இருந்தது.

சில உதாரணங்களைச் சொல்வதானால் ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட’ என்று சிவாஜிக்குப் பாட்டுப் போட்டால் எம்.ஜி.ஆருக்கு ‘மெல்லப் போ மெல்லப் போ’ எனப் பாடல் தரவேண்டியிருந்தது. அதே போல் சிவாஜிக்கு ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்தால்’ எம்.ஜி.ஆருக்கு ‘லவ் பேர்ட்ஸ்’ முத்தம் கொடுக்க வேண்டியிருந்தது.


எம்.ஜி.ஆர். ‘செல்லக்கிளியே மெல்லப்பேசு’ என்று குழந்தையைத் தாலாட்டினால் சிவாஜி ‘செல்லக் கிளிகளாம் பள்ளியிலே’ என்று குழந்தைகளைத் தாலாட்டினார். இன்னும் இது போல பல பாடல்கள் உதாரணம் உள்ளன.

சிவாஜியின் படங்களுக்கு அவரது உருக்கமான நடிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் நுணுக்கமான மெட்டுக்களைக் கொடுத்த மெல்லிசை மன்னர் அதில் பல பாடல்களை ஹரிகாம்போதி, கரஹரப்ரியா, ஆபேரி, ஹிந்தோளம், சாருகேசி, மத்யமாவதி, சக்கரவாகம், ஹம்சானந்தி, பிருந்தாவன சாரங்கா, கல்யாணி எனப் பல்வேறு கர்னாடக இசை ராகங்கள் அடிப்படையிலும், அதே நேரம் மேற்கத்திய இசைச்சாரம் பொங்கும் பாடல்களோடு கிராமிய மணம் கமழும் பாடல்களையும் அமைத்தார்.

எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ஜாஸ், ஸ்பானிஷ், பாரசீக இசை, பாங்கரா எனப் பல்வேறு உலக இசை வடிவங்களிலும் தேஷ், சுத்த சாரங், த்விஜாவந்தி, மாண்ட், பெஹாக், திலங் காபி, பாகேஸ்வரி எனப் பல்வேறு இந்துஸ்தானி ராகங்கள் கலந்து பிரமிப்பூட்டும் மெல்லிசை மெட்டுக்களையும் படைத்தார். அனைத்துப் படங்களிலும் டைட்டில், பின்னணி இசைக்குப் புது அடையாளம் கொடுத்தார். அந்த மகத்தான சரித்திரத்தின் சில அதிசயமான பக்கங்களை வரும் வாரங்களில் தனித் தனியாகப் புரட்டிப் பார்ப்போம்.

பாடல்களே படம்
1932-ம் ஆண்டு ஜே.ஜே.மதன் இயக்கத்தில் வெளியான ‘இந்திர சபா’ என்ற திரைப்படம் சுமார் 70 பாடல்களை கொண்டுள்ளது. இந்த படம் ஆகா ஹாசன் அமானத் என்ற உருதுக் கவிஞர் எழுதிய நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது.

(நாதம் ஒலிக்கும்)
- டெஸ்லா கணேஷ், தொடர்புக்கு: teslaganesh@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

No comments:

Post a Comment

Minister says no Pongal gift due to financial crisis

Minister says no Pongal gift due to financial crisis  TIMES NEWS NETWORK 10.01.2025 Chennai : Chief minister M K Stalin on Thursday launched...