Thursday, October 3, 2019


கல்வியைப் பரவலாக்கிய பெருந்தகை




கோபால்

காமராஜர் நினைவு நாள்: அக்டோபர் 2

தமிழ்நாட்டு முதல்வர்களில் பலர் பல சாதனைகளைப் புரிந்திருக்கி றார்கள். தமிழகம் இன்று பல அளவுகோல்களில் முதல் இடத்தில் இருப்பதற்குப் பங்களித்திருக்கிறார்கள். அவர்களில் கல்வித் துறையில் தனிக் கவனம் செலுத்தியவர்; வறுமையாலும் பிறப்பாலும் யாருக்கும் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகப் பல நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர் காமராஜர். இதற்காக லட்சக்கணக்கான குடும்பங்களால் தலைமுறை தலைமுறையாக நன்றியோடு அவர் நினைவுகூரப்படுகிறார். அவருடைய ஆட்சிக் காலத்தில் கல்வித் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்று தமிழகம் பல துறைகளில் அடைந்திருக்கும் முன்னேற்றத்துக்கான தொடக்கப்புள்ளி.

அனைவருக்கும் கல்வி

குலக் கல்வித் திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால், தமிழக முதல்வராக இருந்த ராஜாஜி பதவி விலகியதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் 1954இல் காமராஜர் முதல்வரானார். 1963வரை அப்பதவியில் இருந்தார். ஆறாம் வகுப்புக்கு மேல் கல்விக்கூடக் கல்வியைத் தொடராதவர் காமராஜர். பின்னர் சொந்த முயற்சியில் பல நூல்களைப் படித்தும் அறிவைப் பெருக்கிக்கொண்டார். இருந்தாலும், முறையான கல்வி பெறாததால் பொது வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சிரமங்கள், முறைசார் கல்வியின் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்தியிருந்தன.

எல்லோருக்கும் கல்வி இன்றியமையாதது என்பதை உணர்ந்திருந்த அவர், முதல்வரான பிறகு அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்வதில் தனிக் கவனம் செலுத்தினார். அவர் தொடங்கிய திட்டங்கள் வறுமையில் வாடியவர்களை மட்டுமல்லாமல் அதுவரை கல்வி மறுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் கல்வி பெற வழிவகுத்தன.

கல்வித் துறைச் சாதனைகள்

காமராஜர் முதல்வரானபின் நிதிநிலையைக் காரணம் காட்டி கல்விக்கு நிதி மறுக்கப்படக் கூடாது என்பதற்காகவே ஒரே நபரை (சி.சுப்பிரமணியம்) கல்வி அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் ஆக்கினார். மாநில பட்ஜெட்டில் 30% கல்விக்கு ஒதுக்கப்பட்டது. அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ஊர் ஊராக, கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டார்.

காமராஜர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது தமிழகத்தின் 15,000 கிராமங்களில், 6,000 கிராமங்களில் மட்டுமே ஏதேனும் ஒரு பள்ளியாவது இருந்தது. பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் இருந்த சிறார்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். வறுமையில் உழன்ற பெற்றோர் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாமல் இருந்ததே இதற்குக் காரணம். இதனால் 1960-ல் அரசுப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி இலவசமாக்கப்பட்டது.

1964-ல் 11-ம் வகுப்புவரை கல்வி இலவச மாக்கப்பட்டதற்கும் அவரது ஆட்சியில் போடப்பட்ட அடித்தளங்களே காரணம். 1957இல் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962 இல் 29,000 ஆக உயர்ந்தது. 1957-ல் 814 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962-ல் 1995 ஆனது. பள்ளியில் பயின்றுகொண்டிருந்த மாணவர்களின் எண்ணிக்கை இந்தக் காலகட்டத்தில் 19 லட்சத்திலி ருந்து 36 லட்சமாக அதிகரித்தது.

இவை தவிர காமராஜரின் ஆட்சிக் காலத்தில்தான் ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. பள்ளிக்கு வர முடியாத மாணவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடம் தேடி ஆசிரியரே சென்று கல்வி கற்பிக்கவே இந்த ஓராசிரியர் பள்ளிகள். அதேபோல் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கும் நடைமுறையும் தொடங்கப்பட்டது.

உணவு, உடை கொடுத்த உத்தமர்

தொடக்கக் கல்வி இலவசமாக்கப் பட்டதன் அடுத்த கட்டமாகப் பள்ளிக்கு வரும் ஏழை மாணவர்களின் பசிப் பிணியைப் போக்கும் பணியையும் அரசே ஏற்றது. 1962-ல் அரசுப் பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் அறிமுகப்படுத்தினார். சென்னையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்துக்காக அந்தக் காலகட்டத்தில் மாபெரும் தொகையான ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. தவிர வசதிபடைத்த மக்கள் பணமாகவும் உணவுப் பொருட்களாகவும் இந்தத் திட்டத்துக்குக் கொடை அளிக்க ஊக்குவிக்கப்பட்டனர். அப்படிக் கொடை அளித்தவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவாஜி கணேசன்.

இப்படிக் காமராஜரின் மூளையில் உதித்து பலரது பங்களிப்பில் உருப்பெற்ற இந்தத் திட்டம், தேசத்துக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தது. அதேபோல் மாணவர்களுக்கிடையே சமத்துவத்தைப் பேண அரசுப் பள்ளிகளில் இலவச சீருடையை காமராஜர் அறிமுகப்படுத்தினார். அரசியலில் செய்த சாதனைகளுக் காகவும் பொதுவாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த நேர்மை, எளிமை ஆகிய மேம்பட்ட குணங்களுக்காகவும் ‘பெருந் தலைவர்’ ‘கிங்மேக்கர்’, ‘கறுப்பு காந்தி’ எனப் பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார் காமராஜர். கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டுக்காக ‘கல்விக் கண் திறந்த காமராஜர்’ என்று இன்றளவும் மக்களால் போற்றப்படுகிறார். அது வெற்று அடைமொழி அல்ல, தமிழக மக்களின் நெஞ்சிலிருந்து நவிலப்படும் நன்றி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024