Thursday, October 3, 2019

மழைக்காலத்தில் படையெடுக்கும் பாம்புகள்: குடியிருப்புகளுக்குள் புகாமல் தடுக்க என்ன செய்யலாம்?



மதுரை

மதுரையில் மழைக்காலம் தொடங்கியதால் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்கத்தொடங்கியுள்ளன. மதுரை மட்டுமல்ல பொதுவாக எல்லா இடங்களிலுமே இச்சிக்கல் இருக்கத்தான் செய்யும்.

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக தொடர் மழை பெய்கிவதனால், அருகில் உள்ள முட் புதர்கள், வயல் வெளிகள், வனப்பகுதியில் இருந்து பாம்புகள், குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவு வருகின்றன.

அச்சமடையும் மக்கள், ஆட்களை அழைத்து அந்த பாம்புகளை அடித்துக் கொல்லுகின்றனர். மிக சிலரே, அடிக்காமல் அதை விரட்டிவிடுகின்றனர். தெரியாமல் மிதித்துவிடுவதால் பாம்புகள் கடிப்பதால் உயிரிழப்பும் மதுரையில் அதிகமாகி வருகிறது.

இதுகுறித்து மதுரை ஊர்வனம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வா கூறுகையில், ‘‘மழைக்காலம் தொடங்கியதும் பாம்புகள் போன்ற குளிர் ரத்த உயிரினங்கள் மனிதன் வாழும் பகுதிக்கு படையெடுப்பது இயல்பே. அதற்கு சில காரணங்கள் உண்டு. மழை நீரால் பாம்பின் வாழ்விடமான வலைகள்(பொந்துகள்), வற்றிய நீர்நிலைகள் நீரால் மூழ்கிவிடுகின்றன.

மனிதர்கள் வாழும் வீட்டின் கத கதப்பான சூழல் பாம்பு போன்ற குளிர் ரத்த உயிரினங்களை ஈர்க்கிறது. மழைக் காலத்தில் தவளை, தேரை போன்ற உயிரினங்களை சாப்பிட பாம்புகள் நடமாட்டம் அதிகரிக்கிறது. சில வகை பாம்பு இனங்களுக்கு இது இனப்பெருக்கக் காலம் என்பதாலும் அவை வெளியே நடமாடத்தொடங்குகின்றன.

கதகதப்பான தார் சாலை குளிர் ரத்த விலங்குகளுக்கு உடல் வெப்பத்தை சீராக்க உதவுவதாலும் அவை வாழ்விடத்தை வெளியேறுகின்றன. எல்லா பாம்பும் நஞ்சுள்ள பாம்புகள் அல்ல. நல்லபாம்பு, கட்டுவிரியன், விரியன், சுறுட்டைவிரியன் ஆகிய நான்கு பாம்புகள் மட்டுமே அதிக மனித உயிர் இழப்புக்குக் காரணமாகிறது.

இவற்றிடம் சற்று எச்சரிக்கையாக இருந்தால்போதும். பாம்பு கடித்தவுடன் பதட்டப்படாமல், அழுகை, கத்துதல், ஓட்டம், ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உதவிக்கு ஒரு நபரையோ அல்லது 108 அவசர ஊர்தி அல்லது இருக்கும் வாகனத்தில் அரசு மருத்துவமன செல்ல வேண்டும்.

இருக்க கயிறு கட்டுதல் வேண்டாம். கத்தியால் வெட்டி, உறிஞ்ச வேண்டாம். தனியார் மருத்துவமனை அல்லது வேறு வகை வைத்தியம் கால தாமதம் ஏற்படும். பாம்பு க்கடிக்கு நஞ்சு முறிவு மருந்து (ANTI SNAKE VENOM) சரியான நேரத்தில் கொடுக்கப்பட உயிர் பிழைத்து கொள்ளலாம்.

பாம்பைக் கண்டவுடன் அதை கொல்ல முற்படாமல் வனத்துறைக்கு (0452 2536279) அல்லது உங்கள் அருகில் உள்ள பாம்பு மீட்பாளர் உதவியை நாடலாம்" என்றார்.

பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

வீட்டைச் சுற்றி துய்மையாக வைத்துக் கொள்ளவும். பழைய பொருட்கள் அடசலாக வைக்காமல், குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து வெளி வரும் கழிவு நீர் குழாய்கள் சல்லடை போன்ற வலை கொண்டு மூடி வைக்க வேண்டும். தூங்கும் முன் கட்டில்கள், தலையணை, மெத்தை விரிப்பு, மெத்தை அடியில் சோதனை இட வேண்டும். தூங்கும் அறை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாயிற் கதவின் கீழ் அல்லது பக்கவாட்டு இடைவெளி இல்லாமல் நிரந்தரமாக அடைத்து வைக்க வேண்டும். கழிவறை மற்றும் குளியலறை போதிய வெளிச்சம் மற்றும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

காலணிகளை பொதுவாக ஷு (shoe) தரையில் வைக்காமல், உயரமான இடத்தில் வைக்க வேண்டும். நன்கு சோதித்த பின்பு அணிய வேண்டும்.

வாகனத்தை குறிப்பாக கைப்பிடி, முன் பகுதி நன்கு சோதனை செய்து பின் இயக்குவது நல்லது.

குப்பைகள் மற்றும் எலிகளை வீட்டுக்குள்ளும், வீட்டின் சுற்றுப் பகுதியில் இல்லாமல் பார்த்து கொள்வது. இரவில் டார்ச் விளக்கு இல்லாமல் வெளியில் செல்வது கூடாது. தோட்டத்து வேலை செய்பவர்கள் வேலை செய்யும் இடத்தை நன்கு சோதனை இட வேண்டும், சற்று விழிப்புடன் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024