Thursday, October 3, 2019

குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களுக்கு தனது ஊதியத்திலிருந்து மாதம் ரூ. 10 ஆயிரம் தர முன் வந்த உதவிமேலாளர்



செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி

குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியர்கள் புதுச்சேரியில் பாண்லேயில் பணிபுரிந்து வருவதால் தனது ஊதியத்தில் மாதந்தோறும் ரூ. 10 ஆயிரத்தை இவர்களுக்கு வழங்குவதாக உதவி மேலாளர் கிருஷ்ணராஜு தனது உயர் அதிகாரிக்கு கடிதம் தந்துள்ளார்.

புதுச்சேரியில் பாண்லே நிறுவனம் மூலம் அரசு பாக்கெட் பால் விநியோகம் செய்து வருகிறது. அத்துடன் ஐஸ்கிரீம், நெய் உள்ளிட்டவையும் விற்பனையாகிறது. இந்நிலையில் இன்று காலை பாண்லே உதவி மேலாளர் கிருஷ்ணராஜு பாண்லே மேலாண் இயக்குநருக்கு கடிதம் தந்துள்ளார்

அதில், நமது பாண்லே அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 130 குறைந்த ஊதியம் தந்து அதிக பணி வாங்குகிறோம். இதனால் அதிகாரி என்ற முறையில் அதிக மன வருத்தம் ஏற்படுத்துகிறது. அவரவர் தகுதிக்கு ஏற்ப ஊதியம் தர வேண்டும். அது வரை எனது ஊதியத்தில் இருந்து ரூ. 10 ஆயிரம் பிடித்தம் செய்து இவ்வூழியர்களுக்கு பகிர்ந்து தர முழு சம்மதம் தருகிறேன். அவர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு உதவினாலும் என் மனதுக்கு மகிழ்ச்சியே. எனது கோரிக்கை ஏற்று இதை அமல்படுத்தலாம் என்று தெரிவித்திருந்தார்.

இவ்விவரம் பாண்லே முழுக்க பரவ தொடங்கியது. பலரும் இவ்விஷயத்தை பகிரத்தொடங்கினர்.

இக்கடிதம் தொடர்பாக கிருஷ்ணராஜுவிடம் கேட்டதற்கு, "இன்று காலை கடிதம் தந்தேன். பல ஆண்டுகளாக எனது பிரிவிலேயே 250க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் பால் பாக்கெட் பிரிவு, ஐஸ்கிரீம் பிரிவு, விற்பனை பிரிவு ஆகியவற்றில் பணிபுரிகின்றனர். அதிக பணி இருந்தாலும் ரூ. 130 மட்டுமே ஊதியம் கிடைக்கும். அது எனக்கு வருத்தத்தை தந்தது. அதனால் எனது ஊதியத்திலிருந்து தொகை தர முடிவு எடுத்து கடிதம் தந்தேன்" என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024