Tuesday, October 8, 2019


வலை 3.0: எல்லோருக்குமான மின்னஞ்சல்!



இணைய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ‘ஹாட்மெயி’லும், அதை உருவாக்கிய சபீர் பாட்டியாவும் மறக்க முடியாத பெயர்கள். குறிப்பாக 1990-களின் பிற்பகுதியில் இணையத்தை அறிமுகம் செய்து கொண்டவர்களுக்கு ‘ஹாட்மெயில்’ மறக்க முடியாத பெயர்.

‘ஹாட்மெயில்’ அறிமுகமான காலத்தில், அதில் கணக்கு வைத்திருப்பது பெருமையான விஷயம். 1996-ல் அறிமுகமான ‘ஹாட்மெயி’லை அடுத்த ஆண்டே மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கியது. ஆனால், அதற்குள் ‘ஹாட்மெயில்’ இணையத்தில் ஏற்படுத்திய அதிர்வலை அசாத்தியமானது. ‘ஹாட்மெயில்’ சேவையை விற்பதற்கு முன்பு சபீர் பாட்டியா மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் கெத்து காட்டிய விதம் இளம் தொழிலதிபர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது.

இத்தனைக்கும் ‘ஹாட்மெயில்’ அறிமுகமாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இணையத்தில் மின்னஞ்சல் அறிமுகமாகிவிட்டது. 1990-களின் தொடக்கத்தில் இணையத்தில் பலரும் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். இருந்தாலும் ‘ஹாட்மெயி’லின் அறிமுகம் இணையவாசிகள் கொண்டாடக் கூடியதாக அமைந்தது. அதற்குக் காரணம், அது மின்னஞ்சலைச் சொந்தக் கணினியிலிருந்து விடுவித்ததுதான். எந்த நேரத்திலும் எங்கிருந்தும் மின்னஞ்சலை அணுகும் வசதியை இது சாத்தியப்படுத்தியது.

அதற்கு முன்பே மின்னஞ்சல் இருந்தாலும் அதை அணுக இணைய வசதி வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சொந்தக் கணினியிலிருந்து மட்டுமே அணுகும் நிலை இருந்தது. அலுவலக கணினிக்கு வந்த மின்னஞ்சலை, வீட்டில் உள்ள கணினியில் பார்க்க முடியாது. மின்னஞ்சல் வந்தபிறகு அதைக் கணினியில் தரவிறக்கம் செய்து, இணைய இணைப்பைத் துண்டித்துவிட்டு ஆப்லைனில் வாசிக்கலாம். இப்போதுபோல, அப்போது இணைய வசதி இல்லை. கட்டணமும் அதிகம்.

இந்நிலையில்தான் ‘ஹாட்மெயில்’, ‘வெப்மெயி’லாக அறிமுகமானது. அதாவது, வலையில் செயல்படும் இணையம் வாயிலாக மின்னஞ்சலை அணுகும் வசதியுடன் ‘ஹாட்மெயில்’ அறிமுகமானது. ‘ஹாட்மெயி’லில் கணக்குத் தொடங்கினால், ஒருவர் தனக்கான மின்னஞ்சலை எந்தக் கணினியிலிருந்தும் அணுகலாம் எனும் சுதந்திரம் கிடைத்தது.

இந்த வரப்பிரசாதம்தான் ‘ஹாட்மெயில்’ சேவையைத் தெறிக்கவிட்டது. இதை உருவாக்கிய இந்திய அமெரிக்கரான சபீர் பாட்டியாவும் இதுபோன்ற ஒரு வரவேற்பை எதிர்பார்த்திருந்தார். அவரும் அவருடைய நண்பரும் இந்தப் புதுமையான யோசனை பற்றி விரிவாக விவாதித்து அலைந்து திரிந்து நிதி திரட்டி ‘ஹாட்மெயில்’ சேவையை அறிமுகம் செய்தனர்.

அறிமுகமான வேகத்தில் ‘ஹாட்மெயி’லுக்கு ஜாக்பாட் அடித்தது. இலவச சேவையான ‘ஹாட்மெயி’லைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பலருக்கும் பரிந்துரைத்தனர். இதனால் சில நாட்களிலேயே ‘ஹாட்மெயில்’ லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஆக, மின்னஞ்சல் சேவையான ‘ஹாட்மெயில்’ மின்னஞ்சல் வாயிலாகவே இணையத்தில் பரவிப் புகழ் பெற்றது.

ஹாட்மெயிலின் அபார வெற்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஈர்த்தது. விளைவு, ‘ஹாட்மெயி’லை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கி, தனது அவுட்லுக் மின்னஞ்சல் சேவையுடன் இணைத்துக்கொண்டது. ‘ஹாட்மெயி’லை விற்கும்போது, அதன் நிறுவனர் சபீர் பாட்டியா உறுதியாகப் பேரம் பேசியது சிலிக்கான் வேலி காணாத வெற்றிக்கதைகளில் ஒன்று. சபீர் பாட்டியா அதன் பிறகு பல இணைய நிறுவனங்களைத் தொடங்கினார். ஆனால், எந்த நிறுவனமும் ‘ஹாட்மெயில்’ அளவுக்கு வெற்றிபெறவில்லை. மின்னஞ்சலை எல்லோருக்கும் கொண்டு சேர்த்த ஹாட்மெயிலும் சபீர் பாட்டியாவும் எப்போதும் நினைவுகூரத்தக்கவர்கள்.

- சைபர்சிம்மன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024