Tuesday, October 8, 2019

மனதைக் கெடுக்கிறதா சமூக வலைத்தளம்?



மிது

சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி நிறைய ஆய்வுகள் வந்துவிட்டன. அண்மையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘லான்செட் சைல்ட் அண்ட் அடாலசென்ட் ஹெல்த்’ என்ற நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், சமூக வலைத்தளங்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகப் புதிய தகவலை கூறியுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளம் ஆண், பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றார்கள். சமூக வலைத்தளங்களில் ஈடுபாடு உடையவர்கள் மட்டுமே இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்டார்கள். அவர்களின் தினசரி நடவடிக்கைகளை ஆய்வாளர்கள் கவனித்துவந்தனர். குறிப்பாக மனரீதியாக அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை முக்கியமாக ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார்கள்.

ஆய்வின் முடிவில் இவர்களில் 90 சதவீதம் பேர் எல்லா வகையிலும் எதிர்மறையாகவும் கவலையுடனும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். ஆண்களைவிட பெண்களே அதிகளவில் பாதிக்கப்பட்டி ருப்பதாகவும் சொல்லியுள்ளார்கள். இரவில் உறங்காமல் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பத்து பேரில் ஏழு பேர் பெண்களே இருந்திருக்கிறார்கள்.

தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களே கதி என்ற கிடப்பதே எதிர்மறையான சிந்தனைக்குக் காரணம் என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், “இரவில் கண்விழித்து சமூக ஊடகங்களில் விழுந்து கிடக்காதீர்கள். நன்றாக உறங்குங்கள். நிஜ நண்பர்களுடன் தொடர்பை இழந்துவிடாதீர்கள். உடல்நலனையும் மன நலனையும் பேணுங்கள்” என்று அறிவுரைக் கூறியிருக்கிறார்கள்.


சமூகவலைத்தளவாசிகளே, ஆய்வாளர்கள் சொல்வது உங்கள் காதில் விழுகிறதா?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024