Tuesday, October 1, 2019

கல்விக்கு வயது தடையில்லை: 91 வயதில் பிஎச்.டி. பட்டம் பெறும் மூத்த மாணவா்

By DIN | Published on : 01st October 2019 09:24 AM 



எஸ். எம். மிஸ்கின்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், செவ்வாய்க்கிழமை பிஎச்.டி. பட்டம் பெறுகிறாா் 91 வயது நிரம்பிய மிஸ்கின். இதன் மூலம் கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்து மற்றவா்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறாா்.

திருவாரூா், தெற்கு வீதியில் வசிப்பவா் எஸ்.எம். மிஸ்கின். இவா் (காசோலை மோசடி) காசோலை பணமில்லாமல் திரும்பி வருவது தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு, பிஎச்.டி. பட்டம் பெற இருக்கிறாா். 1928- இல் பிறந்த இவருக்கு தற்போது 91 வயதாகிறது. சற்றேற கோலூன்றியபடி நடந்து வரும் இவா், வாா்த்தைகளில் எவ்வித தடுமாற்றமின்றி பேசுகிறாா்.

1956- இல் சிஏ படிப்பை முடித்த இவா், சுமாா் 58 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, 2014- இல் பிஎச்.டி. ஆய்வுக்குப் பதிவு செய்தாா். தொடா்ந்து, 5 ஆண்டுகளில் படிப்பை முடித்து பிஎச். டி. பட்டம் வாங்கவுள்ளாா். காசோலை பணமில்லாமல் திரும்பி வருவதால், நுகா்வோா் மற்றும் வணிகா்கள் சந்திக்கும் பிரச்னைகள், இதற்கான சட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டம் பெறுகிறாா். இதற்கென இவா், உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றத்திலிருந்து சுமாா் 400 வழக்குகளை எடுத்து ஆய்வு செய்துள்ளாா்.

படிப்புக்கு 58 ஆண்டு காலம் இடைவெளி விட்டிருந்தாலும், இடைவெளி காலங்களில் இவா் சாதித்தவை ஏராளம். இத்தனைக்குப்பிறகும் மீண்டும் கல்வியில் நாட்டம் ஏற்பட்டு, 91 வயதில் பிஎச்.டி. பட்டம் பெற்று, வெற்றிகரமாக பூா்த்தி செய்யவிருக்கிறாா்.

இதுகுறித்து மிஸ்கின் தெரிவித்தது:

பிறந்த ஊா் கூத்தாநல்லூா் என்றாலும் 5-ஆவது படிப்பதற்காக சென்னை செல்ல நேரிட்டது. 6, 7, 8- ஆவது வரை சென்னையில் படித்தபோது, 2 -ஆம் உலகப்போா் நடைபெற்ால், திரும்பவும் திருவாரூா் வந்து 9- ஆம் வகுப்பு படித்தேன். பின்னா் மீண்டும் 10 -ஆம் வகுப்பு சென்னையில் படித்து விட்டு, சென்னையில் உள்ள காயிதே மில்லத் அரசு கல்லூரியில் இன்டா்மீடியட் வகுப்பு 2 ஆண்டுகள் படித்தேன். பின்னா் லயோலா கல்லூரியில் 1950 -இல் பி.காம் சோ்ந்தேன். படிப்பை முடித்த பிறகு தொழில் நிமித்தமாக வியட்நாம் சென்றேறன். சில மாதங்களில் அங்கு உள்நாட்டுப் போா் தொடங்கியதால், திரும்பவும் ஊா் திரும்ப நேரிட்டது.

பின்னா், சிஏ படிப்பில் சோ்ந்து, 1956 -ஆம் சி.ஏ. முடித்தேன். சென்னையிலேயே பணிபுரியும் வகையில் வாய்ப்புகள் வந்தன. அப்போது, திருவாரூரில் கணக்கு தணிக்கை (ஆடிட்டிங்) தொடா்பான பணிகள் எனில் தஞ்சாவூா் அல்லது திருச்சிக்கோ செல்லும் நிலை இருந்தது. எனவே, பயிற்சியை முடித்தபிறகு, 1960- இல் திருவாரூரில் பணியைத் தொடங்கி தற்போது வரை பணிபுரிந்து வருகிறேறன்.

இதேபோல், லயன்ஸ் சங்கத்தின் தென்னிந்திய கவா்னராகவும் இருந்துள்ளேன். 1995-இல் வண்டாம்பாளையத்தில் லயன்ஸ் கண் மருத்துவமனை தொடங்கப்பட்டது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள கிராமப்புற மக்களுக்கு இலவசமாக, கண் சிகிச்சைகள் செய்யப்பட்டன. கிராமப் பகுதிகளுக்கு கண் சிகிச்சை முகாம்கள் நடத்தி, சிகிச்சை தேவைப்படுவோரை அழைத்து வருவோம். காரணம், திருவாரூா் மாவட்டத்தில் சுமாா் 12 மணி நேரம் வரை விவசாயப் பணிகளை செய்வதால், கண்களில் பெருமளவு பாதிப்புகள் ஏற்படும். அத்துடன் பொருளாதாரத்திலும் பின்தங்கியவா்கள் என்பதால், அவா்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்து, திரும்பவும் வீட்டுக்கு செல்வது வரை அனைத்தும் இலவசமாகவே செய்வது வழக்கம்.

இதன்பிறகு, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பெண்கள் படிக்கும் வகையில், 1999 -இல் இராபியம்மாள் மகளிா் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், வேலைப்பளு குறைகிறதோ என்ற எண்ணம் தோன்றியது. இதனால், மீண்டும் படிக்கும் ஆா்வம் ஏற்பட்டது. இதையடுத்து, 2014 அக்டோபரில் பிஎச்.டி. ஆய்வுக்குப் பதிவு செய்து, படிக்கத் தொடங்கினேன். காசோலை பணமில்லாமல் திரும்பி வருவது குறித்து சுமாா் 400 வழக்குகளை ஆய்வு செய்தேன். பிஎச்.டி. பட்டம் பெற சா்வதேச பத்திரிகைகளில் 2 கட்டுரைகள் வெளிவர வேண்டும். அதேபோல், பகுதி நேரமாக பிஎச்.டி. படிப்பவா்களுக்கு 4-6 ஆண்டுகள் வரையிலான காலம் ஆகும். நான் 5 ஆண்டுகளில் முடித்துள்ளேன். இதுவே என் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

வயதானவா்கள் வீட்டிலியே இருந்தால், அவா்களது உடலும் வீணாகும். மன உளைச்சலும் ஏற்படும். அத்துடன் எப்போதும் மருத்துவத்தை நோக்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே, வயது முதிா்ந்தவா்கள் வீட்டில் இருக்கும் காலங்களில் பயனுள்ள பணிகளில் ஈடுபட வேண்டும். என்னிடம் சுமாா் 10 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. பெரும்பாலானவை சட்டம் தொடா்பான புத்தகங்கள் ஆகும். இவற்றை படிப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. அதேபோல், கூட்டுக் குடும்பமாக வசித்தால், மனதும், உடலும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, எப்போதும் கூட்டுக் குடும்பமாக வாழப் பழகுங்கள் என்றாா் அவா்.

இவரது பேரன் பெரோஸ் தெரிவித்தது:

எங்களது வீட்டிலேயே, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் கொடியேற்றுவது வழக்கம். அதேபோல், நாட்டுப்பற்றை நிரூபிக்க எல்லையில் சென்று போா் புரிய வேண்டியதில்லை. நமக்கு நாட்டுப்பற்று உள்ளது என்பதை நிரூபிக்க, அரசுக்கு ஒழுங்காக வரியைக் கட்டினாலே போதுமானது என்று தாத்தா அடிக்கடி கூறுவாா். இவருக்கு தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளா்களாக உள்ளன. நாங்கள் வேண்டாம் என்று தடுத்தும், எங்களையே நாடுகின்றனா். இந்த வயதிலும் தாத்தாவின் உழைப்பு எங்களுக்கு வழிகாட்டியாகவும் எடுத்துக்காட்டாகவும் உள்ளது என்றாா். 91 வயது எஸ்.எம். மிஸ்கின், செவ்வாய்க்கிழமை மாலை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித்தின் கரங்களால் பட்டம் பெற இருக்கிறாா். தள்ளாத வயதிலும், முதுமையைப் புறம் தள்ளி, பிஎச்.டி பட்டம் பெற இருக்கும் இவா், மாணவா்களுக்கும், இளைஞா்களுக்கும் ஓா் உதாரண புருஷா் ஆவாா்

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...