Thursday, October 3, 2019

திருமணமானவருக்கும் கருணை வேலை உண்டு

Added : அக் 02, 2019 22:44

சென்னை : திருமணமான காரணத்துக்காக, பெண்ணுக்கு கருணை வேலை மறுக்கப்பட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, கூட்டுறவு வங்கி தலைவருக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.கடலுார் மாவட்டம், பென்னாடத்தில், மாளிகை கோட்டம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு, இரவு காவலராக பணியாற்றி வந்தவர், ௨௦௧௧ நவம்பரில் மரணம்அடைந்தார். கருணை வேலை கேட்டு, அவரது மகள் சித்ரா தேவி விண்ணப்பித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தகுதி அடிப்படையில், விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தந்தையின் மரணத்துக்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன், மகளுக்கு திருமணம் நடந்து விட்டதால், கருணை அடிப்படையில் வேலை கோரியது நிராகரிக் கப்படுவதாக, வேளாண் கூட்டுறவு வங்கியின் தலைவர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, மீண்டும் உயர் நீதிமன்றத்தில், சித்ரா தேவி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மகளுக்கு திருமணம் ஆகி விட்டது என்ற ஒரே காரணத்துக்காக, கருணை அடிப்படையில் வேலை தருவதை மறுக்கக் கூடாது என, இந்த நீதிமன்றம் அவ்வப்போது தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, திருமணமான ஒரே காரணத்துக்காக, கருணை வேலை நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. கருணை வேலை கோரிய விண்ணப்பத்தை, தகுதி அடிப்படையில், சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். நான்கு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும்.இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024