Thursday, October 3, 2019

முதியோர் இல்லங்களை மூட...

By ப. இசக்கி | Published on : 01st October 2019 03:38 AM

உலக முதியோர் விழிப்புணர்வு தினம் இன்று (அக்.1) கடைப்பிடிக்கப்படுகிறது. கேரளத்திலும், தமிழகத்திலும் ஆண்டுக்கு ஆண்டு முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. கேரளத்தில் தற்போது சுமார் 600 முதியோர் இல்லங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் சரியான கணக்கு இல்லை என்றாலும்கூட, அதைவிட அதிகம் என்கின்றனர்; இவற்றில் பதிவு பெற்றவை 100-க்கும் குறைவு.
மத்திய அரசின் முதியோருக்கான ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவதற்கு நாடு முழுவதும் முதியோர் இல்லங்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களில் தமிழகத்திலிருந்து அதிகபட்ச விண்ணப்பங்கள் பெறப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இன்றைய சூழ்நிலையில் முதியோரை எவரும் வீடுகளில் வைத்துப் பராமரிக்க விரும்புவதில்லை என்பதால், முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. 


முதியோரை வீட்டில் வைத்துப் பராமரிப்பது மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும் அதில் சவால்கள் அதிகம். முதியோர்களின் வயது, அனுபவம், வாழ்வில் அவர்கள் பெற்ற வெற்றி, தோல்வி முதலானவை பிள்ளைகளைவிட அதிகம் இருக்கலாம். ஆனாலும், அந்த அனுபவ அறிவைப் பயன்படுத்திக் கொள்ள இன்றைய இளைய தலைமுறையினர் தயாராக இல்லை. எனவே, குடும்பத்தில் ஒரு பாரமாகவே முதியோர் கருதப்படுகின்றனர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் பாரமாகக் கருதாமல் இருக்க, இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியல் சூழ்நிலைகளை முதியோரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வயதான பெற்றோரை ஒப்பிடும்போது பிள்ளைகள் வயதிலும், அனுபவத்திலும் குறைவுள்ளவர்களே. எனவே, தங்களைப் போன்றே பிள்ளைகளும் எல்லாவற்றிலும் மிடுக்காக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது. தங்களது இளமைக் காலத்தில் நிறைவேற்றிய அனைத்துப் பணிகளையும் தொடர்ந்து முதியோர் செய்ய முற்படுவதோ அல்லது பிள்ளைகளும் அவ்வாறே செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ சாத்தியம் இல்லை. 

குடும்பத்துக்காக உழைக்கும் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும். பிள்ளைகளுக்கு சில ஆலோசனைகளைக் கூறலாமே தவிர தான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதோ, நிர்ப்பந்திப்பதோ இருவருக்குமிடையே மனக் கசப்பைத்தான் உண்டாக்கும். பிள்ளைகளுக்கு ஆலோசனை கூறுவதோடு அவர்களது நல்ல செயல்களை ஆதரிப்பது நல்லுறவுக்கு வழிவகுக்கும்.
அதேபோல், பெற்றோரைக் கடிந்து கொள்வதை பிள்ளைகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பணி செய்யும் இடத்திலோ அல்லது வேறு இடங்களிலோ ஏற்படும் அழுத்தத்தினால் உண்டாகும் கோபத்தை இயலாமையில் இருக்கும் முதியோர் மீது வாரிசுகள் காட்டுவது தவறு. 

மேலும், முதியோரிடம் பேசும்போது சொற்களை கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம். அவர்கள் பேசுவதைத் தடை செய்வதோ, வெடுக்கென்று பேசி வாயை அடைக்க முயற்சிப்பதோ தகாத செயல். அப்படியே பேசிவிட்டாலும் அதற்காக உடனடியாக மன்னிப்புக் கேட்டு விடுவது சிறப்பு. பெற்றோரிடத்தில் மன்னிப்புக் கேட்பதில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை. அவர்களது மனம் காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை.

முதியோர் மீது எரிச்சல் அடையக் கூடாது. அவர்களது சொல், செயலில் தெளிவின்மை இருக்கலாம். பல் போனால் சொல் போச்சு. உடல் தளர்ந்தால் செயலும் தவறும். எனவே, அவர்கள் பேசும்போதோ அல்லது ஏதேனும் செயலைச் செய்யும்போதோ அதில் தவறு ஏற்படலாம். அதை அமைதியாகவும், மென்மையான வார்த்தைகளாலும் சுட்டிக்காட்டலாம்; மனம் நோக பேசக் கூடாது.

வாழ்க்கையில் நல்ல நிலையை வாரிசுகள் அடைய வேண்டும் என்பதற்காக பெற்றோர் ஏராளமான சிரமங்களைச் சந்தித்திருப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் மனம் கசந்துபோகும்படி பிள்ளைகள் நடந்து கொள்ளக் கூடாது. இளம் வயதில் பெற்றோர், பிள்ளைகளை உற்சாகப்படுத்த என்னவெல்லாம் பேசி இருப்பார்கள். அதைப் போலவே முதிர்வயதில் பெற்றோரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பிள்ளைகள் பேசி அவர்களை மகிழச் செய்யலாம்.

முதியோருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டியது அவசியம். அவர்களுடன் சற்று நேரத்தைச் செலவிடலாம். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டாலே போதும். அவ்வாறு கேட்கும்போது அதில் சில ஆலோசனைகள் இருக்கலாம். அது இளைய தலைமுறைக்கு அவசியமானதாகவோ அல்லது வரும் அபாயம் குறித்த எச்சரிக்கையாகவோ இருக்கலாம். அது முதுமை தரும் கனி.
எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது பேச்சைக் கேட்கும்போது அவர்கள் இன்னும் குடும்பத்தில் முக்கியமானவர்கள்தான், அலட்சியப்படுத்தப்படவில்லை என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படும். 

அதுவே அவர்களுக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் உற்சாகத்தை அளிக்கும். சில வேளைகளில் அவர்கள் சொல்வது முரண்பாடான கருத்தாகக் கூட இருக்கலாம். அதற்காக அவர்களைக் கடிந்து கொள்ளக் கூடாது. முதியோரைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் பல சவால்கள் இருந்தாலும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள முன்வந்தால் நாட்டில் உள்ள பல முதியோர் இல்லங்களை மூடி விடலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024