Friday, October 4, 2019

துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீடு?'தேடல் குழு'வால் பிரச்னை

Added : அக் 04, 2019 02:10

கோவை:கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும் நடவடிக்கையில், அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதால், 'தேடல் குழு'வை கலைத்து, புதிய குழு அமைக்க வேண்டும் என, மாநில பல்கலை ஆசிரியர் சங்கம், கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


147 பேர்


பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, லஞ்ச வழக்கில் கைதானதை தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்பட்டார். இப்பதவி, இரு ஆண்டுகளாக காலியாக உள்ளது. நிர்வாக பணிகளை, மூவர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு கவனிக்கிறது.நீண்ட இழுபறிக்கு பின், ஜூலையில், துணைவேந்தர் தேடல் குழுவுக்கு உறுப்பினர்கள் உறுதி செய்யப்பட்டனர்; இதைத் தொடர்ந்து, துணைவேந்தர் பதவிக்கு, 147 பேர் விண்ணப்பித்தனர்.


முதற்கட்டமாக அவற்றில், 10 பேரை தேர்வு செய்து, பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது; 15ம் தேதி, நேர்காணல் மூலம், மூவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்நிலையில், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட, 10 பேர் கொண்ட பட்டியலில், அரசியல் தலையீடு காரணமாக, தகுதியற்ற நபர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.


லஞ்ச வழக்கில், முன்னாள் துணைவேந்தர் கணபதி கைதாக காரணமாக இருந்த, உதவி பேராசிரியர் நியமன முறைகேடு நடந்தபோது, பதிவாளராக இருந்தவர் பெயரும், கோவை தனியார் கல்லுாரியில், ஒன்றரை ஆண்டு மட்டுமே முதல்வராக பணியாற்றியவரின் பெயரும், பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.


பல்கலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் பசுபதி கூறியதாவது:பாரதியார் பல்கலை துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவரை தேடும், தேடல் குழு உறுப்பினர்களை நியமனம் செய்வதிலேயே அரசியல், அதிகார தலையீடுகள் இருந்தன. இதன் விளைவாகவே, துணைவேந்தர் பதவிக்கான இறுதி பட்டியலுக்கு தேர்வு பெறாத சிலர், கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
அதிகாரம் இல்லை


பல்கலை இருக்கும் இக்கட்டான நிலையை சமாளிக்க, நிர்வாகத்திறன் மிக்க, நேர்மையான துணைவேந்தர் அவசியம். தற்போதுள்ள தேடல் குழுவை கலைத்து, புதிய தேடல் குழுவை அமைக்க வேண்டும் என, கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தேடல் குழு உறுப்பினர் சுப்பிரமணியம் கூறுகையில், ''தேடல் குழு செயல்பாடு குறித்து தகவல் தெரிவிக்க, அதிகாரம் இல்லை. உரிய விதிமுறைகளை பின்பற்றியே, தகுதியான நபர்களை தேர்வு செய்து உள்ளோம்.''விரைவில், நேர்மையான ஒருவர், துணைவேந்தராக நியமிக்கப்படுவார்,'' என்றார்.பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த, 147 பேரில், 10 பேரை, எந்த தகுதிகளின் அடிப்படையில் தேடல் குழு தேர்வு செய்தது என்ற விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மறைமுக தேர்வு முறை, சர்ச்சைக்கே வழிவகுக்கும்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024