Thursday, October 10, 2019


உச்சஸ்தாயி குயில்... கே.பி.சுந்தராம்பாள்! 



வி.ராம்ஜி

பாடப் புத்தகங்களிலும் கதைகளிலும் நாம் படித்து உணர்ந்த தலைவர்களையும் அறிஞர்களையும் நம் கண் முன்னே நடமாடச் செய்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன். அதேபோல், அவ்வைக் கிழவியையும் கவுந்தியடிகளையும் நம் முன்னே நடக்கவிட்டு, பாடச் செய்து, போதனைகள் நடத்தியவர்... கே.பி.எஸ். என்று சொல்லப்படும் கே.பி.சுந்தராம்பாள்.

ஈரோடு அருகே உள்ள கொடுமுடிதான் சொந்த ஊர். சிறுமியாக இருந்த போது, ஊரில் உள்ள கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே, கோயிலில் சிலர், பாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சிறுமி சுந்தராம்பாளுக்கும் பாடத் தோன்றியது. பாடினார். அந்தக் குரல், கோயிலின் பிரமாண்ட மதிலில் பட்டு எதிரொலித்தது. உள்ளே இருந்தவர்கள், சிறுமியை நோக்கி ஓடிவந்து, சூழ்ந்துகொண்டார்கள். வேளியே இருந்தவர்கள், கோயிலுக்குள் நுழைந்து, ‘யார் பாடியது?’ என்று கேட்டுக்கொண்டே ஓடிவந்தார்கள்.

சிறுமியின் குரல்... தனித்துவம் மிக்கதாக இருந்தது. கணீரென இருந்தது. வெண்கலக் குரல் போல் இருந்தது. உச்சஸ்தாயியில் இருந்தது. கேட்டவர்கள், சிலிர்த்துப் போனார்கள்.

பின்னர், கரூரில் ‘நல்லதங்காள்’ நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது பத்து வயது அவருக்கு. நடிப்பை விட, பாட்டு எல்லோரையும் கட்டிப்போட்டது. காலம்... கொஞ்சம் கொஞ்சமாக அவரைத் திரையுலகிற்குள் அழைத்து வந்தது.

இவரின் நாடகங்களைப் பார்க்கவும் இவர் பாடல்களைக் கேட்கவும் கூட்டம் அலைமோதின. நாடகங்களுக்கு ரிசர்வேஷனில் புக் செய்து பார்த்தவர்கள்தான் அதிகம். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வந்தன. கடல் கடந்தும் குரலுக்கு மவுசு எகிறின.

‘நந்தனார்’ படத்தில் நடித்தார். சுந்தராம்பாளின் அற்புதமான பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. ஹைபிட்ச் என்று சொல்லப்படும் உச்சஸ்தாயியில் சுந்தராம்பாள் பாடியது போல், அவரளவுக்கு எவரும் பாடவில்லை. அந்த உச்சஸ்தாயியை எவரும் தொடமுடியாது என்று இன்றைக்கும் சிலாகிக்கிறார்கள் ரசிகர்கள்.

பால பார்ட், ஸ்த்ரீபார்ட், ராஜபார்ட் என மூன்று விதமான கதாபாத்திரங்களிலும் நடித்து, புகழ்பெற்றார் சுந்தராம்பாள்.

‘’நந்தனார்’ படத்தில், நந்தனாராக நடித்தார். ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் ‘அவ்வையார்’ படத்தில் அவ்வையாராக நடித்தார். உடல் மொழியாலும் பேசும் மொழியாலும் அவ்வைக்கிழவியாகவே மாறினார். ரசிகர்கள் பிரமித்தார்கள்.

ஏ.பி.நாகராஜன் - சிவாஜி கூட்டணியில் உருவான ‘திருவிளையாடல்’ படத்தில், அவ்வைப்பாட்டியாக நடித்தார். ‘மகாகவி காளிதாஸ்’, ‘காரைக்கால் அம்மையார்’ என்று இவர் நடித்த படங்களையும் பாடிய பாடல்களையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஒரு பக்கம் பக்திப்பாடல்கள்... இன்னொரு பக்கம் தேசபக்திப் பாடல்கள். மொத்தத்தில் சுந்தராம்பாளின் பாடல்கள், பக்தியூட்டின. தேசத்தை நேசிக்கச் செய்தன.

காந்திஜி, ஈரோட்டுப் பக்கம் வந்த தருணத்தில், இவரின் வீட்டில்தான் உணவருந்தினார். அப்போது, ‘சாப்பாடு மட்டும்தானா. இந்தத் தட்டு எங்களுக்குத்தானே’ என்றார். ‘தாராளமா எடுத்துக்கோங்க’ என்றார். அது தங்கத்தட்டு.

காந்திஜி, அந்தத் தட்டை ஏலம் விட்டார். ஏலத்தில் கிடைத்த தொகையை சுதந்திரப் போராட்டத்துக்கும் மக்களுக்குமாகப் பயன்படுத்த நிதியில் சேர்த்தார் காந்திஜி.

சுந்தராம்பாள், தன் குரல்வளத்தால் எத்தனையோ விருதுகளைப் பெற்றிருக்கிறார். மரியாதையையும் கவுரவத்தையும் அடைந்திருக்கிறார். அவரால் நமக்குக் கிடைத்தது... அற்புதமான, அழகான, கணீர்ப் பாடல்கள்.

கே.பி.சுந்தராம்பாளின் பாடல்கள், காற்றுள்ளவரை கலந்து மிதந்து வரும்.

அவரின் பிறந்தநாளில்... நினைவுகூர்வோம். அவரின் பாடல்களைக் கேட்டு இன்பமுறுவோம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024