Monday, October 7, 2019

`பிறந்த ஊருக்கு ஏதாவது செய்யணும் சார்..!''- மாதத்தில் ஒருநாள் இலவச சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்

இ.கார்த்திகேயன்
மு.செல்வம்

ஒரு ரூபாய்கூட வாங்காமல், மாதத்தில் ஒருநாள் தன் சொந்த ஊருக்கு வந்து இலவசமாக மருத்துவம் பார்த்து வருகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த 75 வயதான ஓய்வுபெற்ற மருத்துவர் முருகேசன்.

மருத்துவர் முருகேசன்


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது, நாதன்கிணறு கிராமம். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை இந்த இலவச மருத்துவ சேவை நடைபெறுகிறது. காலை 9 மணியில் இருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் வரத் தொடங்கிவிடுகின்றனர். இதில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் அடக்கம். சிகிச்சைக்காக வரும் ஒவ்வொருவரையும் வாசலில் நின்று வரவேற்கிறார் டாக்டர் முருகேசனின் தம்பி சந்திரசேகரன். வருகின்ற ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது.


இலவச மருத்துவ முகாம்

பின்னர் டோக்கன் வரிசைப்படி, ஒவ்வொருவராக சிகிச்சை பெறுகின்றனர். ஒவ்வொரு நோயாளியிடமும் நலம் விசாரித்த பிறகே சிகிச்சையைத் தொடங்குகிறார் டாக்டர். பரிசோதனைக்குப் பிறகு அவர் சொல்லும் மருந்து, மாத்திரைகளை சீட்டில் குறிப்பெழுதிக்கொள்கிறார் அவரது தம்பி. காலை, மதியம், மாலை, இரவு, உணவுக்கு முன், பின் என ஒவ்வொரு வேளைக்கும் தனித்தனியாகக் குறிப்பிட்டு அவற்றை நோயாளிகளிடம் கொடுத்து விளக்குகிறார்.

மதியம் 12 மணி வாக்கில் டோக்கன் நம்பர் 50-ஐ நெருங்கும்போது டாக்டர் முருகேசனிடம் பேச்சுக்கொடுத்தோம். "என்னோட சொந்த ஊரு இதே நாதன்கிணறுதான். பள்ளிப் படிப்புக்குப் பிறகு மதுரை மெடிக்கல் காலேஜ்ல M.B.B.S படிச்சேன். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல M.D, D.C.H முடிச்சேன். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 25 வருடம், மதுரை அரசு மருத்துவமனையில் 8 வருடம் என மொத்தம் 33 வருடம் சர்வீஸை முடிச்சேன். கடந்த 2001-ல் ஓய்வுபெற்றேன். தற்போது வரை குடும்பத்துடன் சென்னையில்தான் வசித்துவருகிறேன்.


டாக்டர் முருகேசன்

மாதந்தோறும் இந்த ஊருக்கு வருவேன். அப்போது, எங்க கிராமத்து மக்கள் என்னிடம் சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுச் செல்வார்கள். அந்தச் சமயத்தில் ஒருநாள், இலவச மருத்துவ முகாம் நடத்தினோம். அதில், 150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, ஒவ்வொரு மாதமும் ஒருநாளில் இலவச மருத்துவ முகாமை நடத்தலாம் என குடும்பத்தினரும் சொன்னார்கள்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும், சிகிச்சைக்காக மக்கள் வந்து செல்லவும் வாய்ப்பாக அமையும் என்பதாலும், மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்திட திட்டமிட்டு, கடந்த 2015-ல் இருந்து இலவச மருத்துவ முகாமை நடத்திக் கொண்டுவருகிறேன். இதுவரை 48 கேம்ப் நடந்து முடிந்துவிட்டது. ஒவ்வொரு முகாமுக்கும் 200 பேர் வரை வருகிறார்கள். இரத்தசோகை, வைட்டமின் சத்துக்குறைபாடு, கால்சியம் குறைபாடு காரணமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை எடுத்தாலே ஓரளவு நோய்கள் வருவதைத் தடுக்க முடியும்.


சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்கள்

பரிசோதனையில் அறுவைசிகிச்சை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டால், மற்ற அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்கிறேன். இதுபோக கண்சிகிச்சை, தைராய்டு சிகிச்சை, கேன்சர் விழிப்புணர்வு போன்ற முகாம்களையும் இடையிடையே நடத்திக்கொண்டுவருகிறோம். அரவிந்த் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட 360 பேரில் 154 பேருக்கு இலவச கண்ணாடியும், 33 பேருக்கு கண்புரை நீக்க அறுவைசிகிச்சையும் நடந்தது.

இதுவரை இரண்டு பேருக்கு இதயநோய் அறுவைசிகிச்சையும் நடந்துள்ளது. அடுத்த மாதம் 3-ம் தேதி, இதயநோய் சிகிச்சை முகாம் நடைபெற இருக்கு. ஒவ்வொரு முகாமின்போதும் அடுத்த மருத்துவ முகாமுக்கான தேதியும் அறிவிப்புப் பலகையில் ஒட்டி விடுகிறோம். இதுபோன்ற சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு அந்தந்த துறையிலுள்ள சிறப்பு மருத்துவர்களையே அழைக்கிறேன்.


பி.பி பரிசோதனை

பிறந்த ஊருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைப்பட்டேன். அதனால்தான், துரைசாமி நாடார் – பால்கனி அம்மாள் என ஒரு அறக்கட்டளையைத் துவக்கி, இந்த இலவச சிகிச்சையை நடத்திக் கொண்டுவருகிறோம். செய்கிற பணியைச் சிறப்பாகச் செய்கிறோம். அவ்வளவுதான். இதேபோல், ஒவ்வொரு கிராமத்திலும் இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு ஒவ்வொரு மருத்துவரும் முன்வர வேண்டும்" என்றபடியே நோயாளிகளைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார் மருத்துவர் முருகேசன்.

சிகிச்சை பெறுவதற்காக வந்த சிலரிடம் பேசினோம். ''முருகேசன் டாக்டர், மாசத்துல ஒருநாள் நடத்துற இந்த மருத்துவ முகாமில், எங்க பகுதி மக்கள் மட்டுமில்லாம திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல், காயாமொழி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்காக வர்றாங்க.


அடுத்த முகாம் அறிவிப்பு

நோயைப் பொறுத்து தேவையான மருந்துகளும், தொடர் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு ஒரு மாசத்துக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள், டானிக்குகள் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாசமும் கூட்டம் கூடிக்கொண்டேபோகிறது” என்கின்றனர்.

சேவை என்பதை வெறும் வாய் வார்த்தையாக மட்டுமில்லாமல், நடைமுறையில் செயல்படுத்திவரும் டாக்டர் முருகேசனுக்கு வாழ்த்துச் சொல்லி விடைபெற்றோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024