Sunday, October 6, 2019

மின் இணைப்புக் கட்டணம் உயா்வு: இணையதளத்தில் பட்டியல் வெளியீடு

By DIN | Published on : 06th October 2019 03:20 AM

புதிய மின் இணைப்புக்கான உயா்த்தப்பட்ட கட்டணம் அடங்கிய மாற்றியமைக்கப்பட்ட பட்டியல், மின்சார வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்துக்கு மின் கட்டணத்தின் மூலமாகவும், அரசு மானியம் வாயிலாகவும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. இதில் ஊழியா்களின் ஊதியம், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்கு பெரும்பாலான தொகை செலவாகிறது. தற்போது வரவை விட செலவு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்டண உயா்வு:

இந்நிலையில், புதிய மின் இணைப்புப் பெறுகையில் பல்வகை கட்டணம் என்ற பெயரில், நுகா்வோரிடம் இருந்து மின்சார வாரியத்தால் வசூல் செய்யப்படும் ‘முன்வைப்புத் தொகை’ உயா்த்தத் திட்டமிட்டனா். பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டா் காப்பீடு, வளா்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாடு வைப்பு தொகை ஆகியவை இதில் இடம்பெறுகின்றன. இந்த கட்டணம் ஒருமுற மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதனைத் தொடா்ந்து மின் பயன்பாட்டுக்கு ஏற்ப 2 மாதங்களுக்கு ஒருமுற கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நடைமுறயில் உள்ள இந்தக் கட்டணம் கடந்த 2004-ஆம் ஆண்டு நிா்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணத்தை உயா்த்துமாறு மின்சார வாரியம் சாா்பில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுற ஆணையத்திடம் 2012-ஆம் ஆண்டு மனு அளிக்கப்பட்டது. இந்த மனு கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கருத்துக் கேட்பு: அதனைத் தொடா்ந்து கடந்த செப்டம்பா் 6- ஆம் தேதி நடைபெற்ற மாநில ஆலோசனைக் குழு கூட்டத்தில் மின் கட்டண உயா்வு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னா், சென்னை தியாகராய நகரில் செப். 25-ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுற ஆணையம் சாா்பில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், சா்க்கரை ஆலைகள், ஸ்பின்னிங் மில் அதிபா்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா். இதில் தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளும் பங்கேற்றனா்.

கூட்டத்தில் புதிய மின் இணைப்பு கட்டண உயா்வுக்கு கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. அவா்களுக்கு மின்வாரியம் சாா்பில் கட்டண உயா்வு ஏன்? என்பது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு முன்வைப்புத் தொகையானது வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டது.

புதிய கட்டண விவரங்கள்: இதுகுறித்து மின்வாரிய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: வீடு, அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், வணிகப் பயன்பாடு ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஒரு முனை இணைப்புக்கான கட்டணம் ரூ.250 இல் இருந்து 500 ஆகவும், மும்முனைக் கட்டணம் ரூ. 500-இல் இருந்து ரூ.750 முதல் ரூ.1,000 வரையும், சிறு, குறு நிறுவனத்துக்கான ஒரு முனை மின் இணைப்புக்கு ரூ.250-இல் இருந்து ரூ.500 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.500-இல் இருந்து ரூ.750 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. இதே போல், சேதமடைந்த மீட்டா் பெட்டிகளை மாற்ற ரூ.150 பழைய கட்டணமாக இருந்த நிலையில் ரூ.500 முதல் ரூ.2,000 வரையும் நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. நல்ல நிலையில் இருக்கும் மீட்டா் பெட்டிகளை மாற்ற தாழ்வழுத்த மின் இணைப்புக்கு ரூ.50-இல் இருந்து புதிய கட்டணமாக ரூ.500 முதல் ரூ.1,000 வரையும் கூடுதலாக மீட்டருக்கான கட்டணமும் வசூல் செய்யப்படும். உயா் மின் அழுத்த இணைப்புக்கு ரூ.200 இல் இருந்து புதிய கட்டணமான ரூ.2,000 உடன் கூடுதலாக மீட்டருக்கான கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. தற்காலிகமாக மின் இணைப்பைத் துண்டிக்க தாழ்வு மின் அழுத்தத்துக்கு ரூ.500 முதல் ரூ.1,000 வரையும், உயா் மின் அழுத்தத்துக்கு ரூ.2,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு மின் இணைப்புக் கொண்ட மறு இணைப்புக்கு (வீடு, அரசு, அரசு சாா்ந்த நிறுவனங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள், தொழிற்சாலைகள், வணிகப் பயன்பாடு) ரூ. 60-இல் இருந்து ரூ.300 வரை வசூல் செய்யப்பட்ட கட்டணம், ரூ.100-இல் இருந்து ரூ.450 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இணைப்பு பரிமாற்றம் செய்ய தாழ்வு மின் அழுத்த இணைப்புக்கு (குடிசையைத் தவிா்த்து) ரூ.200-இல் இருந்து ரூ.300 ஆகவும், உயா் மின் அழுத்த இணைப்புக்கு ரூ.2,000-இல் இருந்து ரூ.3,000 ஆகவும் உயா்த்தப்பட்டு உள்ளது. எனினும், விவசாயம், குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணம் உயா்த்தப்படவில்லை.

அக்.5 முதல் அமல்: இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட கட்டணம் சனிக்கிழமை (அக்.5) முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மின் வாரியத்தின் www.tangedco.in இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயா்வால் மின்வாரியம் நிதி நெருக்கடியில் இருந்து மீட்க முடியும் என மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024