Saturday, October 5, 2019

இனி அவ்ளோ தான்! அடுத்த ஆண்டுமுதல் ஜிப்மர், எய்ம்ஸ்க்கும் நீட் தேர்வு

Updated : அக் 05, 2019 00:59 | Added : அக் 04, 2019 23:58

புதுடில்லி : 'அடுத்தாண்டு முதல் 'எய்ம்ஸ், ஜிப்மர்' மருத்துவக் கல்லுாரிகளிலும் 'நீட்' நுழைவுத் தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 'எய்ம்ஸ்' எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்துக்கு சொந்தமான மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

புதுச்சேரியில் செயல்படும் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தால் தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லுாரிகளில் 1500 இடங்களும்; ஜிப்மரில் 200 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவக் கல்லுாரிகளுக்கு தனியாக நுழைவுத் தேர்வை நடத்துவது அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துவதாகவும் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

மற்ற மருத்துவக் கல்லுாரிகளைப் போல் எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரிகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசித்து வந்தது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சரும் பா.ஜ. மூத்த தலைவருமான ஹர்ஷ்வர்தன் டில்லியில் நேற்று கூறியதாவது: அடுத்தாண்டு முதல் எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி களுக்கும் நீட் தேர்வு மூலமாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இந்த கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கும் பொதுவானதாகவே இருக்கும். தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஒரே தரத்தில் அமைவதற்கான வாய்ப்பு ஏற்படும். மேலும் தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி 'நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்' எனப்படும் 'நெக்ஸ்ட்' தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமம் பெற முடியும்;

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்க்கைக்கு அனுமதி பெற முடியும். வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்களும் நெக்ஸ்ட் தேர்வை எழுத வேண்டும். நெக்ஸ்ட் தேர்வுக்கான வழிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் இறுதி செய்யும். இந்த நடைமுறையால் மாணவர்கள் சேர்க்கைக்காக பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளை நாடுவதும் பல்வேறு கவுன்சிலில் நடைமுறைகளை பின்பற்றுவதும் ஒழிக்கப்படும்.

உடல் ரீதியான அலைச்சல் மற்றும் நிதி சார்ந்த பிரச்னைகளில் இருந்து மாணவர்களும் அவர்களது பெற்றோரும் விடுபடுவதற்கு இது பெரிதும் உதவும். மருத்துவ மேற்படிப்பை படிப்பதற்கான 'ரேங்க்'கை பெறுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நெக்ஸ்ட் தேர்வை எழுதலாம். தேசிய மருத்துவ ஆணையத்துக்கான உறுப்பினர்கள் அக்., 14ல் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Devising a foolproof system to ensure credibility of NEET

Devising a foolproof system to ensure credibility of NEET  Recommendations suggested by a seven-member committee to reform the exam have met...