தண்டனையை நிறுத்த, 'நிர்பயா' குற்றவாளிகள் மனு
Added : மார் 01, 2020 00:56
புதுடில்லி:வரும், 3ம் தேதி துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவரும் நிலையில், அதை எதிர்த்து, டில்லி மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள, அக் ஷய் குமார் மற்றும் பவன் குப்தா, புதிய மனு தாக்கல் செய்துள்ளனர்.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி உள்ளது. கடந்த, 2012ல், மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சித்ரவதை செய்யப்பட்ட அவர், பஸ்சில் இருந்து துாக்கி எறியப்பட்டார்; பின், மருத்துவமனையில் உயிரிழந்தார்.இந்த பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.அதை நிறைவேற்றுவதற்கு, இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டன. ஆனால், பல்வேறு புதிய மனுக்களை, இவர்கள் மாறி மாறி தாக்கல் செய்ததால், தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மார்ச், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு தண்டனையை நிறைவேற்ற, பிப்., 17ல், 'வாரன்ட்' றப்பிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பவன் குப்தா மற்றும் அக் ஷய் குமார் சார்பில், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'துாக்கு தண்டனையை உறுதி செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'அது நிலுவையில் உள்ளது. அதனால், 3ம் தேதி தண்டனையை நிறைவேற்றக் கூடாது' என, பவன் குப்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'தண்டனையை குறைக்கும்படி, ஜனாதிபதிக்கு புதிய கருணை மனு அனுப்பப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளதால், தண்டனையை நிறைவேற்றக் கூடாது' என, அக் ஷய் குமார் சார்பில் கூறப்பட்டுள்ளது.இவற்றை விசாரணைக்கு ஏற்ற, டில்லி நீதிமன்றம், நாளைக்கு இந்த வழக்கை விசாரிப்பதாக கூறியுள்ளது. மேலும், இவர்கள் மனு குறித்து பதிலளிக்கும்படி, டில்லி திஹார் சிறை நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.இந்த புதிய மனுக்களால், திட்டமிட்டபடி, 3ம் தேதி இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகமே என, சட்ட நிபுணர்கள் கூறிஉள்ளனர்.
No comments:
Post a Comment