காமாட்சி அம்மன் வீதியுலாவில் தடி முறிந்து ஊர்வலம் நிறுத்தம்
Added : மார் 03, 2020 00:37
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்ஸவத்தில் நேற்று நடைபெற்ற தங்க சூரிய பிரபை வீதியுலாவின்போது தடி முறிந்ததால் ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்ஸவம் பிப்ரவரி 28ம் தேதி துவங்கியது.தினமும் காலை மற்றும் இரவில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்மன் வீதியுலா செல்கிறார். நான்காம் நாளான நேற்று காலை தங்கசூரிய பிரபை வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
அப்போது அம்மனுக்கு கச்சபேஸ்வரர் கோவில் எதிரில் 18 அடி அகலம் உடைய பெரிய குடை மாற்றப்பட்டது. அங்கிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் துாக்கி செல்ல பயன்படுத்தப்பட்ட தடி முறிந்தது.இதனால் சூரிய பிரபை வாகன ஊர்வலம் பாதியில் நிறுத்தப்பட்டது. தடி முறிந்தாலும் வாகனம் கவிழவில்லை; யாருக்கும் காயமுமில்லை.
இதையடுத்து கேடயத்தில் வைத்து அம்மனை கோவிலுக்கு எடுத்து சென்றனர். முறிந்த தடியை அகற்றி கோடியகாரர்கள் துாக்கி சென்றனர். பிரம்மோற்ஸவத்திற்காக நடப்பாண்டு செய்யப்பட்ட புதிய தடியில் முறிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். இரவு வாகன அம்மன் வீதியுலாவுக்கு பழைய தடி பயன்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment