4 குற்றவாளிகள் துாக்கு மீண்டும் தள்ளிவைப்பு
Updated : மார் 03, 2020 00:50 | Added : மார் 03, 2020 00:27
புதுடில்லி : நாட்டையே அதிர வைத்த, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கில், குற்றவாளிகளின் துாக்கு தண்டனை மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதைக்கு ஆளானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில், முகேஷ் குமார் சிங், 32, பவன் குப்தா, 25, வினய் குமார் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி திஹார் சிறையில், இவர்களுக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, இரண்டு முறை, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டும், சட்ட சிக்கல்களால் நிறைவேற்ற முடியாமல் தள்ளி வைக்கப்பட்டது.
மூன்றாவது முறையாக, இன்று காலை, 6:00 மணிக்கு துாக்கு தண்டனையை நிறைவேற்ற, டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் புதிய, 'வாரன்ட்' பிறப்பித்திருந்தது. இந்நிலையில், பவன் குப்தா, அக் ஷய் குமார் இருவரும், டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்தனர். அவற்றில் 'உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும், ஜனாதிபதிக்கு மீண்டும் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் உள்ளதால், துாக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நேற்று, டில்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில், இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது, இருவரின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, 'துாக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது' என அறிவித்தார். இதையடுத்து, பவன் குப்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏ.பி.சிங்., ''பவன் குப்தாவின் சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்றம் காலையில் தள்ளுபடி செய்ததை அடுத்து, உடனே ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளதாகவும், ஆகவே துாக்கு தண்டனையை தள்ளி வைக்க வேண்டும்,'' என, கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, மதிய உணவு இடைவேளைக்குப் பின், வழக்கை விசாரிப்பதாக, நீதிபதி அறிவித்தார். அதன்படி, மீண்டும் நீதிமன்றம் கூடியதும், ஏ.பி.சிங்கை, நீதிபதி தர்மேந்திர ராணா கடுமையாக கடிந்து கொண்டார். ''நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். ''யாராவது ஒருவர் தவறாக நடந்தாலும், விளைவு எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். பவன் குப்தா, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளதால், துாக்கு தண்டனை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகிறது,'' என, நீதிபதி உத்தரவிட்டார்.
'நிர்பயா' வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு, இந்தாண்டு, ஜன.,22, பிப்.,1 ஆகிய தேதிகளில் துாக்கு தண்டனை அறிவிக்கப்பட்டு, தள்ளி வைக்கப்பட்டது. இன்று நிறைவேற்றப்பட இருந்த துாக்கு தண்டனை, நீதிமன்ற உத்தரவால், மூன்றாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தோல்வியை காட்டுகிறது
என் மகளின் இறப்புக்கு காரணமாக குற்றவாளிகள், துாக்கு தண்டனையில் இருந்து மூன்றாவது முறையாக தப்பித்துள்ளது, நம் நாட்டின் சட்ட நடைமுறைகளின் தோல்வியை காட்டுகிறது. அநீதிக்கான தண்டனை தள்ளிப் போவதை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.
-ஆஷா தேவி, 'நிர்பயா'வின் தாயார்
கருணை மனு
'நிர்பயா' வழக்கில் குற்றவாளியான பவன் குப்தா, ஜனாதிபதிக்கு எழுதிய கருணை மனுவை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, அனுப்பியுள்ளார். 'பவன்குப்தாவின் கருணை மனு விரைவில், ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment