வழி தவறிய 80 வயது முதியவர் 'வாட்ஸ் ஆப்' உதவியால் மீட்பு
Added : மார் 02, 2020 21:28
தஞ்சாவூர்: தஞ்சைக்கு ரயிலில் வழி தவறி வந்து, ஐந்து நாட்கள் சுற்றித் திரிந்த, பரமக்குடியைச் சேர்ந்த, 80 வயது முதியவர், 'வாட்ஸ் ஆப்' தகவலால், மகனிடம் சேர்க்கப்பட்டார்.
ராமநாதபுரம், பரமக்குடி அடுத்த சாத்தனுாரைச் சேர்ந்தவர் நாகரத்தினம், 80; மனைவி இறந்து விட்டார். குமார், ராஜாராம் என, இரு மகன்கள் டிரைவராக உள்ளனர். நாகரத்தினம் சரியாக பேச முடியாமலும், நடக்க முடியாமலும் இருந்தார்; ஞாபக மறதியும் அதிகம்.ராமநாதபுரத்தில், மூத்த மகன் குமாருடன் வசித்து வந்துள்ளார். பரமக்குடியில், இளைய மகன் ராஜாராம் உள்ளார்.
பரமக்குடி ஸ்டேட் வங்கியில், மாதம்தோறும் முதியோர் உதவித்தொகை வாங்க, நாகரத்தினம் ரயிலில் செல்வது வழக்கம்.பிப்., 26ல், பரமக்குடி சென்று, வங்கியில் பணம் வாங்கியவர், மறுபடியும் ராமநாதபுரம் செல்ல, பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். ஆனால், தவறுதலாக, தஞ்சை வழியாக சென்னை செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவர், வழி தெரியாமல் சுற்றித் திரிந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, மருத்துவக் கல்லுாரி சாலையில் மயங்கி கிடந்தார். அவ்வழியே வந்த வல்லம் ரியாசுதீன், 38, என்பவர் மீட்டு விசாரித்ததில், முதியவர் பரமக்குடியைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. மற்ற விபரங்களை அவரால் சொல்ல தெரியவில்லை.ரியாசுதீன், பரமக்குடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்து, சாத்தனுாரைச் சேர்ந்த இருவரின் மொபைல் எண்களை பெற்று, 'வாட்ஸ் ஆப்'புக்கு முதியவர் படத்தை அனுப்பி உள்ளார்.அவர்கள், பரமக்குடி, சாத்தனுார் பகுதியில் உள்ள, 'வாட்ஸ் ஆப்' குரூப்களுக்கு முதியவர் படத்தை பகிர்ந்துள்ளனர்.
இதை நாகரத்தினத்தின் இளையமகன் ராஜாராமன் பார்த்து, ரியாசுதீனை தொடர்பு கொண்டார்.நேற்று அதிகாலை, ராஜாராமன் தஞ்சை வந்து, தந்தையை அழைத்து சென்றார்.
No comments:
Post a Comment