Tuesday, March 3, 2020


திருக்குறள் ஒப்புவித்தால் குடும்பத்திற்கே அசைவ விருந்து: தமிழை வளர்க்க புதுச்சேரி ஓட்டலில் புதுமை

Added : மார் 03, 2020 02:44

புதுச்சேரி:புதுச்சேரி அருகே ஓட்டல் ஒன்றில், திறக்குறள் ஒப்புவித்தால் போதும், குடும்பத்திற்கே மெகா அசைவ விருந்து வைத்து அசத்துகின்றனர்.
உலக பொது மறையாக விளங்கும் திருக்குறள் பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, வருங்காலத்திலும் அதன் புகழை மங்காமல் பாதுகாக்க தமிழ் ஆர்வலர்கள் பலரும் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் பொதுமக்களிடையே திருக்குறளை எளிதாக கொண்டு சேர்க்கும் புதுமையான முயற்சியில் புதுச்சேரியை சேர்ந்த சமையற்கலை வல்லுநரான நிருபன் ஞானபானு இறங்கியுள்ளார்.புதுச்சேரி அடுத்துள்ள கரிக்கலாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இவர், அமெரிக்காவில் உள்ள ஓட்டல்களில் சமையற் கலை வல்லுநராக பணிபுரிந்துள்ளார். புதுச்சேரி- கடலுார் சாலையில் நோணாங்குப்பம் பகுதியில் கீற்று வேயப்பட்ட கொட்டகையில் இயற்கை சூழலுடன் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை துவக்கியுள்ளார்.தமிழ் மீது பற்றுகொண்ட நிருபன் ஞானபானு, திருக்குறளின் புகழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தனது ஓட்டலுக்கு வரும் எவரும், 100 திருக்குறளை ஒப்புவித்தால் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் என 21 வகையான மெகா அசைய விருந்து வைத்து அசத்தி வருகிறார்.குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்தால் தங்களது குடும்பத்தோடு இலவசமாக அசைவ விருந்தை சாப்பிட்டு மகிழலாம். நிருபன் ஞானபானுவின் இந்த புதுவிதமான முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024