கொரோனா வைரஸ் தடுப்புக்கு தொடரும் ஆராய்ச்சி' உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி தகவல்
Added : மார் 17, 2020 21:30
சென்னை :''கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுப்பு மருந்துகளை கண்டறியவும், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன,'' என, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி, சவுமியா சுவாமிநாதன் பேசினார்.சென்னை, கிண்டியில் உள்ள, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த, 'சர்வதேச கோவிட் - 19' என்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கருத்தரங்கத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி, சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:சீனாவின், வூஹான் மாகாணத்தில் உருவெடுத்த கொரோனா வைரஸ், இதுவரை, 127 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை, 6,500 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தவும், தடுப்பு மருந்துகளை கண்டறியவும், உலக சுகாதார நிறுவனம், பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்கிறது. உலக நாடுகள்அனைத்திற்கும், கொரோனா பரவலை தடுப்பது குறித்த, வழிகாட்டுதல் நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் கூடக் கூடாது; கைகுலுக்கி வரவேற்பதை விட, நம் பராம்பரிய முறையில், கைகூப்பி வரவேற்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதை, பல நாடுகளும், பின்பற்ற துவங்கியுள்ளன. கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு, முதலில், நுரையீரல் தான் அதிகம் பாதிக்கப்படும். எனவே, கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்தி, தேவையான தடுப்பு மருந்துகளை, தொடர்ந்து அளிப்பதன் வாயிலாக, அவர்களை குணப்படுத்த முடியும்.கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க, மக்கள் அனைவரும், கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு பயன்படுத்தி, நன்றாக கழுவ வேண்டும். கைகளை முகத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
கருத்தரங்கம் குறித்து, இந்த பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் கூறியதாவது:மற்ற நாடுகளில் வழங்கப்படும் மருத்துவ முறைகள் குறித்து, கருத்தரங்கத்தில் அறிய முடிந்தது. கருத்தரங்கம், தமிழக டாக்டர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது. தமிழகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பரவலை தடுக்க, பொதுமக்களின் பங்கு முக்கியத்துவம்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமான, உணவு பொருட்களை சாப்பிட வேண்டும். காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். மற்றவர்களிடம் நெருக்கம்காட்டுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment