நள்ளிரவில் கூடும் பிரியாணி இளைஞர்கள்!
வி. சாமுவேல் 17.03.2020
வட சென்னையின் புளியந்தோப்பு பகுதி. இரவு 1 மணி. அந்தப் பின்னிரவில் ஒரு கடைக்கு இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்குகிறார்கள். அதிகாலை 3 மணியாகும் போது இளைஞர்களின் கூட்டம் இரட்டிப்பாகிவிடுகிறது.
இரவு வேளையில் இந்த இளைஞர்களின் படையெடுப்பு எதற்காக? புளியந்தோப்பில் உள்ள சிறிய உணவகத்தில் நள்ளிரவிலிருந்து தயாரிக்கப்படும் பிரியாணியை, அதிகாலை வேளையில் ரசித்து ருசித்துச் சாப்பிடுவதற்காக இளைஞர்கள் இப்படிக் கூடுகிறார்கள்.
பிரியாணியை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது.
அசைவப் பிரியர்களின் விருப்பப் பட்டியலில் பெரும்பாலும் பிரியாணியும் இடம்பிடிக்கும். பிரியாணியை விரும்பும் இளைஞர்கள்தாம் அதிகாலை வேளையில் அதைத் தேடி இங்கே வருகிறார்கள். வட சென்னையில் உள்ள இந்தக் கடைக்கு தென் சென்னையில் உள்ள திருவான்மியூர், வேளச்சேரி, பல்லாவரம், ஈ.சி.ஆரிலிருந்து இளைஞர்கள் பைக்கில் வந்து பிரியாணியை ஆசைதீரச் சாப்பிட்டு பார்சலும் வாங்கிச் செல்கிறார்கள். இதன் காரணமாகவே ‘புளியந்தோப்பு இரவு பிரியாணி’ என்ற அடைமொழியுடன் இக்கடை பிரபலமாகிவிட்டது.
புளியந்தோப்பில் வாசனை
சென்னையில் நள்ளிரவில் பல உணவுக் கடைகள் செயல்பட்டுவந்தாலும், இந்தக் குறிப்பிட்ட கடையை நோக்கி இளைஞர்கள் வட்டமிடக் காரணம் இல்லாமல் இல்லை. இக்கடை இளைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்கிறார் இக்கடையின் உரிமையாளர் சம்சுதீன். “பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கடையைத் தொடங்கினேன். பகலில்தான் இந்த உணவகம் செயல்பட்டது.
ஆனால், இரவு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், அதிகாலையில் உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் பலரும் இரவில் உணவு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டார்கள். அவர்களின் விருப்பத்துக்காகத்தான் இரவில் பிரியாணி விற்பனையைத் தொடங்கினேன். இன்று இந்தக் கடை இளைஞர்களால் பிரபலமாகிவிட்டது” என்கிறார் சம்சுதீன். இக்கடையில் பிரியாணி உள்பட அசைவ உணவுவகைகளை சம்சுதீனும் அவருடைய மனைவியும் மட்டுமே தயாரிக்கிறார்கள்.
பகலில் மூடிக்கிடக்கும் இக்கடை, இரவில் பிஸியாகிவிடுகிறது. நள்ளிரவில் பிரியாணியைச் செய்யத் தொடங்குகிறார். அதிகாலை 3 மணிக்கெல்லாம் ஊரையே எழுப்பும் அளவுக்கு பிரியாணி வாசனை ஆளைத் தூக்குகிறது. அதற்கு முன்பாகவே கடையில் குவிந்துவிடும் இளைஞர்கள், பிரியாணி, மட்டன், சிக்கன் தயார் ஆனதும், நீண்ட வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி, அந்த அதிகாலை வேளையில் ஆசைதீரச் சாப்பிட்டுச் செல்கிறார்கள்.
ஒவ்வொரு இளைஞரும் தன்னுடன் நண்பர்களை அழைத்துவருவதால், அவர்கள் மூலம் இக்கடை வெவ்வேறு பகுதிகளிலும் பிரபலமடைந்து விட்டது. இந்தச் சிறிய கடை இன்று சமூக ஊடகங்களில் புழங்கும் ஃபுட்டீஸ் வழியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி என ஊர்களுடன் சேர்ந்து பிரியாணி புகழ்பெற்றதைப் போல, புளியந்தோப்பு இரவு பிரியாணியும் இடம் அந்தப் பட்டியலில் இடம் பிடித்துவருகிறது.
No comments:
Post a Comment