பெண்கள் தினம்: ஒரு வார நிகழ்வை நடத்துமாறு பல்கலை., கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு
2.3.2020
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, ஒரு வாரத்துக்கு சிறப்பு நிகழ்வுகளை நடத்துமாறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு யுஜிசி அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்கள் நிகழ்ச்சிகளைக் கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு, பயிற்சிப் பட்டறைகள், விரிவுரைகள், வினாடி வினாக்கள், விவாதங்கள், தெரு நாடகங்கள், மராத்தான், கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. அத்துடன் பாலின சமத்துவம், பெண்கள் உடல்நலன், கல்வி, அதிகாரமளித்தல், பெண்கள் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளை மார்ச் 1 முதல் 7 வரை நடத்தவேண்டும் எனவும் நிறைவாக பெண்கள் தினமான மார்ச் 8 அன்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவும் யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இதற்காக முன்கூட்டியே தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ள யுஜிசி, மார்ச் 9-ம் தேதி தங்கள் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பான அறிக்கை, புகைப்படங்கள், வீடியோக்களை பல்கலைக்கழக கண்காணிப்புத் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment