Sunday, March 1, 2020

இலவச மருத்துவம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மருத்துவரை மணந்த உதவி ஆட்சியர்


சென்னையைச் சேர்ந்த மருத்துவர் தி.கிருஷ்ணபாரதியுடன் தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த உதவி ஆட்சியர் மா.சிவகுருபிரபாகரன்.

தஞ்சாவூர்  1.3.2020

எனது கிராமத்துக்கு மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கவேண்டும் என்று நூதன வரதட்சணை கேட்டு சென்னை மருத்துவரை மணந்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த உதவி ஆட்சியர் மா.சிவகுருபிரபாகரன்.

பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சிவகுருபிரபாகரன்(32). ஐ.ஐ.டி-யில் எம்.டெக் முடித்த சிவகுருபிரபாகரனுக்கு, ஐஏஎஸ் ஆவது இலக்காக இருந்ததால் பிற துறைகளில் கிடைத்த வேலைவாய்ப்புகளைத் தட்டிக் கழித்து வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் அகில இந்தியஅளவில் 101-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும் பிடித்த சிவகுருபிரபாகரன், தற்போது திருநெல்வேலி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

மேலும், டாக்டர் ஏ.பி.ஜே கிராம வளர்ச்சிக் குழுவை உருவாக்கி அதன் மூலம் மருத்துவ முகாம் நடத்தியது, ஏரியைத் தூர் வாரியது போன்ற நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், சிவகுருபிரபாகர னுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கத் தொடங்கிய தன் பெற்றோரிடம், “100 பவுன் நகை, கார் போன்ற வரதட்சணை தரும் பெண் வேண்டாம். பெண் டாக்டராக இருக்க வேண்டும், நமது கிராமத்துக்கு வரும்போது ஊர் மக்களுக்காக இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு சம்மதம் என்று சொல்லும் பெண் கிடைத்தால் சொல்லுங்கள்” எனக் கூறியுள்ளார்.

அதன்படி, சிவகுருபிரபாகர னின் கோரிக்கையை சென்னைநந்தனம் கல்லூரியில் கணித விரிவுரையாளராக பணியாற்றும் திருமலைசாமியின் மகள் மருத்துவர் கிருஷ்ணபாரதி ஏற்றுக்கொண்டு, திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து, சிவகுருபிரபாகரன்- கிருஷ்ணபாரதி திருமணம் அண்மையில் பேராவூரணியில் நடைபெற்றது.

இதுகுறித்து சிவகுருபிரபாகரன் கூறியதாவது: நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது கிராம வளர்ச்சிக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறேன். அதேபோன்று, என் மனைவியையும் சேவையில் ஆர்வம் கொண்டவராக, மருத்துவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதன்படி, என்னுடைய விருப்பத்தை ஏற்றுக்கொண்ட கிருஷ்ணபாரதியை மணந்துகொண்டேன் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024