Sunday, April 19, 2020

20-ம் தேதி முதல் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்ய முடியுமா? மாற்றத்துடன் மத்திய அரசு புதிய உத்தரவு


பிரதிநிதித்துவப்படம்


ஆன்லைனில் இம்மாதம் 20-ம் தேதி (நாளை) முதல் அனைத்து வகையான பொருட்களையும் ஆர்டர் செய்ய அனுமதியளித்திருந்த நிலையில், மத்திய அரசு திடீரென யூடர்ன் அடித்துள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வரும் மே 3-ம் தேதி வரை அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

அதாவது முன்பு பிறப்பித்த உத்தரவில் மொபைல் போன், டிவி, லேப்டாப், ஸ்டேஷனரி உள்ளிட்ட அனைத்துவகையான பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இவற்றை நாளை ஆர்டர் செய்ய முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஆர்டர் செய்திருந்தாலும் விற்பனை செய்யமுடியாது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வரும் மே மாதம் 3-ம் தேதி வரை லாக் டவுன் நடைமுறை இருந்தாலும், வரும் 20-ம் தேதிக்குப் பின் சில தொழில்களுக்கு விதிமுறைகளைத் தளர்த்தி வழிகாட்டி நெறிமுறைகளை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதில் ''அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் வரும் 20-ம் தேதி முதல் அனைத்து வகையான பொருட்களையும் மக்கள் ஆர்டர் செய்யலாம். அதேசமயம், அந்தப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்வதற்கு அந்தந்த உள்ளூர், நகர அதிகாரிகளிடம் முறையாக நிறுவனங்களின் முகவர்கள் அனுமதி பெற வேண்டும்.

அதாவது வாகனங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் பிரிவில் இருக்கும் பணியாளர்களுக்கும், வாகனங்களுக்கும் அனுமதி பெறுவது கட்டாயம்.

இதற்கு முந்தைய அறிவிப்பில் உணவு, மருந்துப்பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நிலையில் வரும் 20-ம் தேதிக்கு மேல் அனைத்துப் பொருட்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை டெலவிரி செய்யும் பிரிவில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பு, நலன் ஆகியவற்றில் முக்கியத்துவம் செலுத்துவது அவசியம். கண்டிப்பாக சமூக விலகலைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் நாளை முதல் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர்களை எடுக்கும்போது அத்தியாவசியபமற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அத்தியாவசியமான பொருட்கள், மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மட்டுமே ஆர்டரர் எடுக்கவேண்டும். பொருட்கள் டெலிவரிக்குச் செல்லும் முன்பு உள்ளூர் அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெற்றிருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024