’உதயகீதம்’, ‘பிள்ளைநிலா’, ‘தெய்வப்பிறவி’; ஒரேநாளில் ரீலீஸ்; மூன்றுமே செம ஹிட்டு; 35 வருடங்களாச்சு!
V. Ramji 19.04.2020
நடிகர் மோகன் நடித்த ‘உதயகீதம்’, ‘பிள்ளைநிலா’, ‘தெய்வப் பிறவி’ ஆகிய மூன்று படங்களும் ஒரே வருடம் ரிலீசானவை. அதுமட்டுமல்ல... மூன்று படங்களும் ஒரே நாளில், தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் வெளியாகின. மூன்றுமே மிகப்பெரிய வெற்றியை அடைந்தன.
’மூடுபனி’ என்கிற பாலுமகேந்திரா படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் மோகன். முன்னதாக ‘கோகிலா’ எனும் கன்னடப் படத்தில் பாலுமகேந்திராதான் அவரை அறிமுகப்படுத்தினார்.
’மூடுபனி’ வந்த சமயத்திலேயே இயக்குநர் மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தார். மிகச்சிறந்த நடிகை என்று பெயர் பெற்ற சுஹாசினியின் முதல் படம் இது. படத்தி சுஹாசினியின் நாயகன் மோகன். எனவே, தமிழ் சினிமாவில் சுஹாசினியின் முதல் நாயகன்.... மோகன்!
இதையடுத்து, ‘பசி’ இயக்குநர் துரையின் ‘கிளிஞ்சல்கள்’ படம் 200 நாட்களைக் கடந்து ஓடியது. சொல்லப்போனால், இந்தப் படத்தில்தான் மோகன் என்று தனி டைட்டில் கார்டு வந்தது. வலிக்க வலிக்கக் காதலைச் சொன்ன இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பாடல்கள் முக்கியக் காரணமாக அமைந்தன. பாடல்களை எழுதி இசையமைத்தவர் டி.ராஜேந்தர்.
பிறகு, ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், கோவைத்தம்பியின் ‘பயணங்கள் முடிவதில்லை’ வெளியாகி, தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் பரபரப்பாக்கியது. இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் செம ஹிட்டாகின. இந்தப் படம் வெளியான பிறகு மோகனின் மார்க்கெட் சூடுபிடித்தது.
எல்லா நகரங்களும் ரோம் நகரம் நோக்கி... என்றொரு வாசகம் உண்டு. அதேபோல், கோடம்பாக்கத்தின் பல தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் மோகனைப் புக் செய்ய ஆர்வமானார்கள். மோகனை ஹீரோவாக்கினால், படம் ஓடுவது நிச்சயம் என்று முழுதுமாக நம்பினார்கள்.
மளமளவென மோகனுக்குப் படங்கள் வந்தன. எல்லாப் படங்களும் முதலுக்கு மோசமில்லை என்று உத்தரவாத வெற்றியைத் தந்தன. அதுமட்டுமா? முக்கால்வாசி படங்கள் இருநூறு நாட்களைக் கடந்து ஓடின.
ஒரு வருடத்தில், மிக முக்கியமாக ஓடிய படங்கள் எனும் பட்டியலில் மோகனின் படங்கள் தவறாமல் இடம்பிடித்தன. வசூல் குவித்த படங்களின் பட்டியலிலும் மோகனின் படங்கள் தனியிடம் பிடித்தன.
இந்தநிலையில், மோகனின் திரை வாழ்வில், 1985ம் ஆண்டு மறக்கவே முடியாத ஆண்டாக அமைந்தது. ஏகப்பட்ட படங்கள் வெளியாகி, எல்லா மோகன் படங்களுமே வெற்றி பெற்றன. முக்கியமாக, 85ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியான ‘உதயகீதம்’ படத்தை எவருமே மறக்கமுடியாது.
85ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி வெளியானது ‘உதயகீதம்’. கோவைத்தம்பி தயாரிப்பில், கே.ரங்கராஜ் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில் வெளியானது. மோகன், ரேவதி, லட்சுமி முதலானோர் நடித்த இந்தப் படத்தில் தூக்குத்தண்டனைக் கைதியாக, பாடகராக அமர்க்களப்படுத்தியிருந்தார் மோகன். இளையராஜாவின் இசையில் வெளியான 300 வது படம் இது. 300 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. எல்லாப் பாடல்களும் செம ஹிட்டு. கவுண்டமணி செந்தில் காமெடியும் ஏக ரகளை பண்ணியது.
85ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியானது ‘பிள்ளைநிலா’. கலைமணி கதை வசனத்தில் அவர் தயாரிப்பில் மனோபாலா இயக்கத்தில் வெளியான ‘பிள்ளைநிலா’, காதலும் த்ரில்லரும் நிறைந்த படமாக வந்து மிரட்டியது. மோகனுக்கே இதுவொரு புது அனுபவப் படம்.
ஏற்கெனவே மனோபாலா, மோகனுக்கு நல்ல பழக்கம். கார்த்திக்கை வைத்து எடுத்த முதல்படமான ‘ஆகாய கங்கை’ தோல்விப்படமாக அமைந்ததில் அடுத்த படம் கிடைக்காமல் ரொம்பவே துவண்டிருந்தார் மனோபாலா.
அந்த சமயத்தில், கலைமணி மோகனிடம் கதை சொல்ல, மோகன் போட்ட ஒரே கண்டீஷன்... ‘இந்தப் படத்தை மனோபாலா இயக்குவதாக இருந்தால், உடனே கால்ஷீட் தருகிறேன்’ என்பதுதான்! அதன்படியே மனோபாலா ஒப்பந்தமானார்.
அந்த காலகட்டத்தில், காலை, மாலை என பல படங்களுக்கு ஒப்பந்தமாகியிருந்தார். ஆகவே, இந்தப் படத்துக்கு தொடர்ந்து ஒவ்வொரு இரவும் கால்ஷீட் கொடுத்தார் மோகன். உடனே கலைமணியும் மனோபாலாவும் சேர்ந்து, அதிக நேரம் இரவிலேயே கதை நடப்பதாக உண்டுபண்ணினார். பேபிஷாலினி, ராதிகா, நளினி ஆகியோரின் அசத்தலான நடிப்பில் வெளியாகி, பிரமாண்டமான வெற்றியைக் கொடுத்தது ‘பிள்ளைநிலா’.
இந்தப் படத்தின் பின்னணி இசை, இன்னொரு மிரட்டல். இளையராஜாவின் பின்னணி இசை, தனி ரிக்கார்டாக வெளியாகி, இன்னொரு ரிக்கார்டு சாதனையாக உருவானது தனிக்கதை. மனோபாலாவும் வெற்றி இயக்குநராக மிகப்பெரிய ரவுண்டு வந்தார்.
இதேபோல், டி.ராமாநாயுடுவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து பில்லா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய படம் ‘தெய்வப் பிறவி’. 85-ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு நாளில் வெளியான இந்தப் படத்தில் ராதிகா, ஊர்வசி முதலானோர் மோகனுடன் நடித்தனர். சங்கர் கணேஷ் இசையமைத்தார். மோகனின் நடிப்பு பேசப்பட்டது. ‘உதயகீதம்’ அளவுக்கோ ‘பிள்ளைநிலா’ அளவுக்கோ மெகா வெற்றியைப் பெறவில்லை. ஆனாலும் படம் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் லாபத்தையே தந்தது. நூறு நாட்கள் ஓடியது.
ஆக, மோகன் நடித்த ‘உதயகீதம்’, ‘பிள்ளைநிலா’, ‘தெய்வப்பிறவி’ மூன்று படங்களும் 85ம் ஆண்டில் வெளியானவை. மூன்று படங்களும் தமிழ்ப் புத்தாண்டில் வெளியானவை. மூன்று படங்கள் ரிலீசாகி, 35 வருடங்களாகின்றன. இந்த 35 வருடங்களில், இதுவரை எந்த நடிகர் நடித்த படங்களும் ஒரேநாளில் மூன்று என வெளியானதே இல்லை என்பது இன்னொரு சரித்திரப் பதிவான சாதனை!
No comments:
Post a Comment