Friday, April 24, 2020

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தகுதி பட்டியலை நிறுத்தி வைக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

2020-04-24@ 08:06:31

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி பட்டியலை நிறுத்தி வைக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஸ்டான்லியில் மருத்துவ கல்லூரி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு மைய முதுநிலை நிபுணராக பணியாற்றி வரும் மருத்துவர் ஜி.பி.அருள்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2009 முதல் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். இந்தாண்டு கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்று முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேவையான மதிப்பெண்களை கூடுதல் சதவீதத்துடன் பெற்றுள்ளேன். ஏற்கெனவே தமிழக அரசு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி ஏ.செல்வம் தலைமையில் கமிட்டி அமைத்து தொலைதூர, கடினமான மற்றும் ஊரக பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் சேர நீட் மதிப்பெண்ணுடன் சலுகை மதிப்பெண்கள் வழங்கி வருகிறது.

அதன்படி உயிர் காக்கும் 24 மணி நேர விபத்து அவசர சிகிச்சை மற்றும் முக்கிய மருத்துவ பிரிவுகளான என்ஐசியு, சீமான்க் போன்றவற்றில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் முதுநிலை படிப்பில் சேர சலுகை மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் 24 மணி நேரமும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு போன்ற கடினமான பிரிவுகளில் பணிபுரிவோருக்கு இந்த சலுகை மதிப்பெண் வழங்கப்படுவது இல்லை. நான் கடந்த 10 ஆண்டுகளாக கடினமான சவால் மிகுந்த இப்பிரிவில் பணிபுரிந்தும் சலுகை மதிப்பெண் கிடைக்காததால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் என்னால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. எனவே என்னை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கு அனுமதித்து சலுகை மதிப்பெண் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி எம்.சுந்தர் முன்பாக காணொலி காட்சி வாயிலாக நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரின் மனுவை தேர்வுக்குழு வரும் மே 18ம் தேதிக்குள் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க வேண்டும். அதுவரை முதுநிலை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலை வரும் ஜூன் 8ம் தேதி வரை வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும், என உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024