சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த மேலும் 3 டாக்டர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து டாக்டர்கள் தங்கியிருந்த விடுதி அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
பதிவு: ஏப்ரல் 20, 2020 04:15 AM
சென்னை,
தமிழகத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்ட பரிசோதனையில் ஈடுபட்ட ஒரு பெண் ரெயில்வே டாக்டருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் டாக்டர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இருதய சிகிச்சை பிரிவில் பணி புரிந்த டாக்டரும் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவருமான ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் பணியில் இருந்த அனைவரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்திருந்தனர். அதில் 2 செவிலியர்களுக்கும் நோய் தொற்று இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இருதய சிகிச்சை பிரிவில் பணி புரிந்த மேலும் 3 டாக்டர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மூவரும் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள். இதில் 27 வயதான பட்டமேற்படிப்பு மாணவர் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் அனைவரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வீட்டு கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
மேலும் அவர்கள் தங்கி இருந்த வீடு மற்றும் தெருவை மாநகராட்சி அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு வெளியில் இருந்து யாரும் வராத வண்ணம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மற்ற 2 டாக்டர்கள் சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி பணி புரிந்துள்ளனர். இதனால் அவர்கள் தங்கி இருந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment