Sunday, April 12, 2020


வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்
 
மனைவி மஞ்சுளாவுடன் முதியவர் அறிவழகன்
மனைவி மஞ்சுளாவுடன் முதியவர் அறிவழகன்
 
ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் புற்றுநோய் பாதித்த தன் மனைவிக்கு சிகிச்சை அளிக்க, கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு சைக்கிளிலேயே அழைத்துச் சென்ற முதியவரின் செயல் நெகிழ வைத்திருக்கிறது

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமடைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருக்கின்றன.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை


ஒட்டுமொத்த இந்தியாவும் முடங்கியிருப்பதால் விளிம்புநிலை மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், வயது 65. இவரின் மனைவி மஞ்சுளா (வயது 60) புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மஞ்சுளாவுக்கு நோய் முற்றிய நிலையில் அவருக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்க வேண்டும். அதனால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருக்கின்றனர்.

ஆனால் ஊரடங்குச் சட்டத்தால் தமிழகம் - புதுச்சேரி எல்லைகள் சீல் வைக்கப்பட்டிருப்பதுடன், பேருந்துகள் இயக்கமும் நிறுத்தப்பட்டிருப்பதால் புதுச்சேரிக்கு எப்படிச் செல்வது என்று புரியாமல் தவித்திருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு வசதியில்லை.

புற்று நோய்

ஊரடங்கு முடிந்தபிறகு செல்லலாம் என்று நினைக்கும் அளவுக்கு மனைவியின் உடல்நிலை சீராக இல்லை. நோயுற்ற மனைவி வலியால் துடிப்பதைப் பார்க்குமளவுக்கு சக்தியில்லை. அதனால் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று நினைத்த முதியவர் அறிவழகன், துணிந்து அந்த முடிவை எடுத்தார்.

தன்னிடம் இருந்த பழைய சைக்கிளில் மனைவி மஞ்சுளாவை புதுச்சேரிக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு எத்தனை கிலோமீட்டர்… எவ்வளவு நேரமாகும், அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்ல முடியுமா.. நம்மால் சைக்கிளை மிதிக்க முடியுமா.. வழியில் பஞ்சராகிவிட்டால் என்ன செய்வது… போலீஸ் இருப்பார்களே என எதைப்பற்றியும் யோசிக்கவில்லை முதியவர் அறிவழகன். அவரின் சிந்தனை அனைத்தும் தன் மனைவியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டும்தான்.

முதியவர் அறிவழகன்

இடுப்பில் கட்டிய வேட்டியுடன், தோளில் துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு மனைவியை சைக்கிளில் அமர வைத்த அறிவழகன், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் என 130 கிலோமீட்டர் தூரத்தை இரவு முழுவதும் கடந்து, விடியற்காலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

கொரோனா தொற்று காரணமாக வெளிப்புற சிகிச்சைப் பிரிவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்திருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனாலும் முதியவர் அறிவழகன் சைக்கிளிலேயே வந்த தகவலைக் கேட்ட மருத்துவர்கள் வெலவெலத்துப் போயிருக்கிறார்கள். உடனே மஞ்சுளாவை மருத்துவமனையில் அனுமதித்த அவர்கள், அவருக்குத் தேவையான சிகிச்சைகளைக் கொடுத்திருக்கிறார்கள். இருவரையும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்க வைத்த மருத்துவர்கள், அவர்களுக்கு தங்கள் செலவில் உணவுகள், மருந்துகள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

2 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு இருவரையும் தங்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இலவசமாக கும்பகோணம் அனுப்பி வைத்திருக்கின்றனர் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள். சிகிச்சைகள் அனைத்தும் முடிந்ததும், எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள் என்று அறிவழகனிடம் மருத்துவர்கள் கேட்க, ``எம்பொண்டட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லைன்னா நான் இல்ல” என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார்.

இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசியபோது, ``ஊரடங்கு சட்டத்தால் பேருந்துகள் இல்லை. அதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் மனைவியை அந்த முதியவர் 130 கிலோமீட்டர் சைக்கிளிலேயே அழைத்து வந்ததாகக் கூறினார். அதனால் உடனே அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளித்தோம். குறிப்பிட்ட தூரம் வரைதான் எங்களால் ஆம்புலன்ஸ் சேவைகள் வழங்க முடியும். ஆனால், அவர்களின் ஏழ்மை நிலைமையைக் கருத்தில்கொண்டு ஆம்புலன்ஸை இலவசமாகவே அனுப்பி வைத்தோம்” என்றது.

No comments:

Post a Comment

NEWS TODAY 23 AND 24.12.2024