வாசிம் அக்ரம் பந்து வீச்சை சச்சினைப் போல் உறுதியாக ஆடிய வீரரைப் பார்த்ததில்லை: சென்னை டெஸ்ட் நினைவலையில் சக்லைன் முஷ்டாக்
கிரிக்கெட் அரங்கில் பிற்பாடு சச்சின் டெண்டுல்கர்-கிளென் மெக்ரா, சச்சின் டெண்டுல்கர் -ஷேன் வார்ன் என்று கிரிக்கெட் மோதலை பெரிதாகப் பேசினாலும் சக்லைன் முஷ்டாக்- சச்சின் டெண்டுல்கர் மோதல் பெரிய சுவாரசியமானது.
அதுவும் 1999-ம் ஆண்டு சென்னையில் அந்த புகழ்பெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் 136 ரன்கள் என்ற நம்பமுடியாத சதத்தை யாரும் அதன் தோல்வித் துயரத்துடன் மறக்கத்தான் முடியுமா?
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் பிறந்த தினமான இன்று சக்லைன் அந்த டெஸ்ட்டை நினைவுகூர்ந்தார், “1999-ல் அந்த சென்னை டெஸ்ட்டில் நானும் சச்சினும் பேசிக்கொள்ளவே இல்லை, ஏனெனில் இருவரும் ஆட்டத்தில் உன்னிப்பாகக் கவனம் செலுத்தி வந்தோம்.
இருவருமே நாட்டுக்காக போட்டியில் வெல்வதில் கவனமாக இருந்தோம். எங்களது இருதயத்தையும் ஆன்மாவையும் களத்தில் இறக்கியிருந்தோம்.
சச்சின் கிரிக்கெட் கரியரில் இந்த டெஸ்ட் தொடர்பாக என் பெயரும் இணைத்துப் பேசப்படுவது எனக்குப் பெருமையாக உள்ளது. அன்று கடவுள் என் பக்கம் இருந்தார்.
மற்றபடி சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் அன்று நம்ப முடியாத ஆட்டம். பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆனது, வாசிம் அக்ரம் ரிவர்ஸ் ஸ்விங் வீசி அதனை சச்சின் போல் அவ்வளவு உறுதியுடனும் நம்பிக்கையுடனும் ஆடிய வீரரை நான் பார்த்ததில்லை.
எனக்கும் சச்சினுக்குமான மோதலில் வெற்றி 50:50 என்று தான் கூறுவேன், நானும் அவரை வீழ்த்தியுள்ளேன் அவரும் என்னை பிய்த்து உதறியுள்ளார். சென்னையில் 4ம் நாளில் கூட கடினமான பிட்சில் அவர் சதம் எடுத்தாரே.
என்னுடைய தூஸ்ராவை சரியாகக் கணிப்பவர் சச்சின், கையை நன்றாகப் பார்ப்பார், அவரது கண்கள் அவருக்கு ஒரு வரப்பிரசாதம்.
நான் பந்து வீச சில அடிகள் எட்டிவைக்கும் போதே சச்சின் நான் என்ன வீசப்போகிறேன் என்பதைக் கணித்து விடுவார். அவரது கால் நிலை துல்லியம், திராவிட், அசார் ஆகியோரும் என்னை அருமையாக ஆடியுள்ளனர்.
களத்துக்கு வெளியேயும் சச்சினுடன் நிறைய பழகியிருக்கிறேன், பிரிட்டனில் முஷ்டாக் அகமெட் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளோம். மிகவும் நயநாகரிகமான,எளிய மனிதர் சச்சின். யார் காலையும் வாரி விடமாட்டார் சச்சின். அவருடன் நேரம் செலவழித்தால் நிறையக் கற்றுக் கொள்ள முடியும்” இவ்வாறு கூறினார் சக்லைன் முஷ்டாக்..
No comments:
Post a Comment