'நிவார்!' வரும் 25-ல் தமிழகத்தில் வீசுகிறது புயல்: மாநிலம் முழுமைக்கும் 'ரெட் அலர்ட்!'
Updated : நவ 23, 2020 00:30 | Added : நவ 22, 2020 22:55

சென்னை:வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவார்' புயல், நாளை மறுதினம், மாமல்லபுரம்- - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இப்புயல் வீசுவதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று துவங்கி, வரும், 26ம் தேதி காலை வரை, மாநிலம் முழுதும், 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவரும், துணை இயக்குனர் ஜெனரலுமான, பாலச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:தெற்கு மற்றும் வங்க கடலின், மத்திய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது.
இது, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை, 'நிவார்' புயலாகவும் வலுவடையும். இந்த புயல், வங்க கடலின் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் பகல் அல்லது பிற்பகலில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கலாம். இதன் காரணமாக, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். நாளை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார், அரியலுார், பெரம்பலுார் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், இடியுடன் கூடிய மிக அதிக கன மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிக கன மழை வரை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும்.
நாளை மறுதினம், நாகை, தஞ்சை, திருவாரூர், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், மிக அதிக கன மழை பெய்யும்.திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்துார், ராணிப்பேட்டை, வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னை மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, கடல் கொந்தளிப்பாக காணப்படும். பல மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும். மணிக்கு, 100 கி.மீ., வேகம் வரை, கடலுக்குள் சூறாவளி காற்று வீசும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.‛ரெட் அலர்ட்' மாவட்டங்கள்நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களுக்கும், காரைக்காலுக்கும், இன்று கன மழைக்கான, 'மஞ்சள் அலர்ட்' விடப்பட்டுள்ளது.
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலுார், அரியலுார், பெரம்பலுார் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு, நாளை, 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.நாகை, தஞ்சை, திருவாரூர், கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலுார், பெரம்பலுார், புதுச்சேரி, காரைக்காலுக்கு, நாளை மறுநாள், 'ரெட் அலர்ட்' விடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மற்ற கடலோர மாவட்டங்கள், வேலுார், திருவண்ணாமலை மற்றும் அதையொட்டிய வடக்கு மற்றும் மேற்கு உள் மாவட்டங்களுக்கு, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடப்பட்டுள்ளது.
புயலுக்கு ஈரான் பெயர்!
* தென் மாநிலங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும், வட கிழக்கு பருவ மழை, பெரும்பாலும் புயல் வீசும் பருவமாகவே இருக்கிறது
* இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை துவங்கியதில் இருந்து, இது, இரண்டாவது புயல். முதலாவது புயல் கேட்டி, சில நாட்களுக்கு முன், குமரி அருகே மேலடுக்கு சுழற்சியாக இருந்து, பின் அரபிக்கடலுக்குள் சென்று, புயலாக மாறியது. நேற்றிரவு, இந்த புயல் சோமாலியாவில் கரையை கடந்தது
* முதல் புயலுக்கு, இந்தியா சார்பில், 'கேட்டி' என, பெயர் வைக்கப்பட்டது. தமிழகத்தை தாக்க உள்ள, 'நிவார்' புயலுக்கு, ஈரான் நாட்டில் இருந்து, பெர்ஷிய மொழியில் பெயர் வைக்கப்பட்டு உள்ளது
* இந்த புயல், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானாவின் சில பகுதிகள், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வரை வீசும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தென் மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதிகளில், 'நிவார்' புயல் காரணமாக மணிக்கு, 75 - 100 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், வரும், 26ம் தேதி காலை வரை, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சென்றுள்ள மீனவர்கள், உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரபிக்கடலில் ‛கேட்டி' புயல்!
தமிழகத்தில், குமரி கடல் அருகே, கடந்த வாரம் மையம் கொண்ட மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, அரபி கடலுக்குள் நுழைந்தது. இது, ‛கேட்டி' என்ற பெயர் சூட்டப்பட்ட புயலாக மாறி, சோமாலியாவுக்குள் நுழைந்தது. இந்த புயலின் காரணமாக, தென்மேற்கு அரபி கடலுக்குள், இன்று வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
No comments:
Post a Comment