அண்ணா பல்கலை விவகாரம்: மந்திரியிடம் அமித்ஷா கிடுக்கி
Updated : நவ 23, 2020 00:02 | Added : நவ 22, 2020 23:30
சென்னை:அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், நேரில் விளக்கம் அளித்தார்.
அவரிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு, அமித் ஷா பதில் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சுரப்பா மீது, 250 கோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்துள்ளது. பல்கலை கழக பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, உயர் கல்வித் துறை வாயிலாக, ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உயர் கல்வித் துறைக்கும், துணை வேந்தர் சுரப்பாவிற்கும் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பு, 15 நிமிடங்கள் நடந்தது. அப்போது, அண்ணா பல்கலை பிரச்னை குறித்து, அமித் ஷாவிடம், அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்தார். உயர்கல்வி தொடர்பாக, மத்திய, மாநில அரசுகளிடையே உள்ள முரண்பாடுகளை களைவது குறித்தும், உயர் கல்வித் துறை அமைச்சர் வாயிலாக, சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதேநேரத்தில், பல்கலை விவகாரம் தொடர்பாக, பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு, அமைச்சர் அன்பழகனிடம் அமித் ஷா பதில் பெற்றதாகவும், அதன் வாயிலாக தன் சந்தேகங்களை, அவர் தீர்த்துக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment