தமிழ் அழிவது வேதனையை தருகிறது உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உருக்கம்
Added : நவ 22, 2020 23:31
மதுரை: ''தமிழகத்தில், தமிழ் அழிவது வேதனையைத் தருகிறது,'' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி என்.கிருபாகரன் பேசினார்.
மத்திய தொல்லியல் துறை - ஏ.எஸ்.ஐ., - திருச்சி மண்டலம் சார்பில், உலகப் பாரம்பரிய வார விழா, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்தது. மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் வரவேற்றார்.காரணம்உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிர்வாக நீதிபதி, என்.கிருபாகரன் பேசியதாவது:மதுரை, 2,500 ஆண்டுகள் தொன்மையான நகர் என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. தமிழின் தொன்மைக்கு, மதுரையைச் சுற்றி சான்றுகள் உள்ளன. ஆங்கிலம் கற்கும் அதே வேளையில், தமிழையும் அறிந்திருக்க வேண்டும். தற்போது, வெளிநாட்டு மோகம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தமிழ் அழிவது வேதனையைத் தருகிறது.எந்த இனத்திற்கும், மொழிதான் ஆணிவேர். நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதை தெளிவுபடுத்துவது மொழி தான்.தமிழர்கள், 2,500 ஆண்டுகளுக்கு முன், கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தனர் என்பதற்கு பிராமி எழுத்துகளே சான்று.தமிழ் எந்தளவிற்கு தொன்மையானதோ, சமணமும் தொன்மையானது. கீழடி அகழாய்விற்குப் பின், தமிழின் தொன்மையை அறியும் ஆவல் ஏற்பட்டுள்ளது. எந்த தொன்மையான மொழியையும் ஏற்கும் மனநிலை, சகிப்புத் தன்மை தேவை.இவ்வாறு, அவர் பேசினார்.
உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி பி.புகழேந்தி பேசியதாவது:நீதிபதி கிருபாகரனின் வார்த்தைக்கு, மந்திர சக்தி உண்டு. மருத்துவப் படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமலாகியுள்ளது. இதற்கு, அது தொடர்பான வழக்கை, நீதிபதி கிருபாகரன் கையாண்ட விதமே காரணம்.மந்திர சக்திதனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள், கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத யதார்த்த நிலை உள்ளது. அவர்களுக்கு அரசியல் கட்சிகள் ஏன் உதவ முன்வரக்கூடாது என நீதிபதி கிருபாகரன் அமர்வு அறிவுறுத்தியது.இதைத் தொடர்ந்து அரசும், எதிர்க்கட்சியும் போட்டி போட்டு, உதவ முன்வந்துள்ளன. நீதிபதி கிருபாகரனின் மந்திர சக்தியால், தொல்லியல் துறைக்கும் ஏதாவது நல்லது நடக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment