'விண்ணுலகம் இல்லம்' என சுடுகாட்டுக்கு பெயர்சூட்டல்
Added : நவ 22, 2020 23:55
சென்னை: சுடுகாட்டுக்கு, 'விண்ணுலகம் இல்லம்' என்று, பெயர் சூட்டப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது,
கிராண்ட் லைன் ஊராட்சி. இங்கு, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கமுதி அரசு, தலைவராக உள்ளார். இந்த ஊராட்சியில், இறப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கான சுடுகாடு, மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு மரங்கள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. 2018ல் வீசிய, 'கஜா' புயலால், இங்கிருந்த பல மரங்கள் மற்றும் சுற்றுச்சுவர் நாசமானது.
புழல் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், இதை கண்டுகொள்ளவில்லை. கடந்தாண்டு, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, புதிதாக ஊராட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டதும், இந்த சுடுகாட்டை புனரமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. புயலில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை அகற்றி, புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. சுடுகாட்டிற்கு, 'விண்ணுலகம் இல்லம்' என, ஊராட்சி சார்பில் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. மாதவரம் நெடுஞ்சாலை வழியாக செல்பவர்கள், இந்தப் பெயரை ஆச்சரியத்துடன் பார்த்தபடி செல்கின்றனர். சுடுகாட்டை பூங்கா போல பராமரிப்பதற்காக, மரக்கன்றுகள், பூச்செடிகள் நடவு செய்யும் பணிகளும் நடக்கின்றன.
No comments:
Post a Comment