Thursday, January 7, 2021

பொங்கல் பரிசில் துணிப்பை இல்லை ரேஷன் கடைகளில் மக்கள் வாக்குவாதம்


பொங்கல் பரிசில் துணிப்பை இல்லை ரேஷன் கடைகளில் மக்கள் வாக்குவாதம்

Added : ஜன 06, 2021 23:29

சென்னை:சென்னை உட்பட, பல இடங்களில், ரேஷன் கடைகளில், பொங்கல் பரிசுக்கு, துணிப்பை வழங்க மறுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழக அரசு, ரேஷன் கடைகள் வாயிலாக, 2.10 கோடி அரிசி கார்டுதாரருக்கு, தலா, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு, துணிப்பை ஆகியவை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.பணத்துடன், அரிசி, சர்க்கரையை எடை போட்டு வழங்கும் ஊழியர்கள், ஏற்கனவே, குறிப்பிட்ட எடையில், 'பாக்கெட்' செய்துள்ள, முந்திரி, திராட்சை, ஏலக்காயுடன், கரும்பும் வழங்குகின்றனர்.

ரொக்க பணம் வாங்கும் அவசரத்தில், பலர் துணிப் பையை வாங்க மறந்து விடுகின்றனர். பல கடைகளில், வேண்டுமென்றே துணிப்பை வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன.இது குறித்து, சிலர் கூறுகையில், 'பொங்கல் பரிசில் துணிப்பை வழங்குவதில்லை. அதை வழங்குமாறு கேட்டால், 'நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள்' எனக் கூறுகின்றனர். 'மறுநாள் கடைக்கு சென்றால், உள்ளே அனுமதிக்காமல் வெளியேற்றுகின்றனர்' என்றனர்.

இது குறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்களில் இருந்து, கார்டுதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, துணிப்பை வழங்காமல் குறைத்து தான் வழங்கினர். கார்டுதாரர்கள், துணிப்பை கேட்டு வாக்குவாதம் செய்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால், 'கார்டுதாரர் எடுத்து வரும் பையில், பொருட்களைக் கொடுங்கள்; துணிப்பை கேட்டால் வரவில்லை என்று சொல்லுங்கள்' என, பதில் தருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு, 38 கிராம் எடையில், 23 ரூபாய் மதிப்பில், ஒரு துணிப்பை வழங்க உத்தரவிட்டு, அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், 47 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, கார்டுதாரர்கள், பொங்கல் பரிசில் துணிப்பையை கேட்டு பெற வேண்டும்.

பொங்கல் பரிசில் உள்ள எந்த ஒரு பொருளையும், ஊழியர்கள் தர மறுத்தால், கடையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்ணில் புகார் தரலாம். அதேபோல், கூட்டுறவு சங்கங்களில் இருந்து, துணிப்பை தரவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட சங்கத்தின் மீது, ஊழியர்களும் புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024