10 நிமிடத்தில், 'பாஸ்டேக்' அட்டைகள் வழங்க ஏற்பாடு
Added : பிப் 18, 2021 01:51
சென்னை:சுங்கச்சாவடிகளின் இரு புறங்களிலும், வாகன உரிமையாளர்களுக்கு, 10 நிமிடங்களில், 'பாஸ்டேக்' அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
.நாடு முழுதும் உள்ள சுங்கச்சாவடிகளில், ரொக்க கட்டணத்திற்கு மாற்றாக, மின்னணு முறையில் சுங்க கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறை, இம்மாதம், 16ம் தேதி அமலுக்கு வந்தது.இவற்றை, 80 சதவீத வாகன உரிமையாளர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். எஞ்சியுள்ள, 20 சதவீத வாகன உரிமையாளர்கள், 'பாஸ்டேக்' அட்டை வாங்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
இவ்வாறு, 'பாஸ்டேக்' இல்லாமல், சுங்கச் சாவடிகளை கடப்பவர்களிடம், இரண்டு மடங்கு அபராத கட்டணம்வசூல் செய்யப்பட்டு வருகிறது.இதனால், வாகன உரிமையாளர்கள், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கடும் வாக்கு வாதம் செய்து வருகின்றனர். எனவே,சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இரண்டு மடங்கு கட்டணம் வசூலிப்பதை தவிர்ப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பரிந்துரைப்படி, பல்வேறு தனியார் வங்கிகள், பண வங்கிகள், தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் வாயிலாக 'பாஸ்டேக்' அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுங்கச்சாவடிகளின் இரண்டு புறங்களிலும், குடைகளை விரித்து அமர்ந்து, காலை, 7:00 முதல் இரவு, 8:00 மணி வரை, 'பாஸ்டேக்' அட்டைகளை வழங்க துவங்கி உள்ளனர்.இதற்கென, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு, 10 நிமிடங்களில் வாகன உரிமையாளர்களுக்கு, 'பாஸ்டேக்' அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால், 'பாஸ்டேக்' அட்டைகளை வாங்க, வாகன உரிமையாளர்கள் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளனர்.
No comments:
Post a Comment