Thursday, February 18, 2021

சுதந்திரத்துக்கு பின் முதல் முறையாக துாக்கிலிடப்படும் பெண் குற்றவாளி

DINAMALAR

இந்தியா

சுதந்திரத்துக்கு பின் முதல் முறையாக துாக்கிலிடப்படும் பெண் குற்றவாளி

Added : பிப் 17, 2021 21:55

லக்னோ:நாடு சுதந்திரம் பெற்ற பின், பெண் குற்றவாளி ஒருவர், முதல் முறையாக துாக்கிலிடப்பட உள்ளார்.

உத்தர பிரதேசத்தில், இந்த சம்பவம் நடக்கஉள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை யிலான, பா. ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷப்னம். இவர், சலீம் என்பவரை காதலித்தார். இதற்கு, ஷப்னம் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

150 ஆண்டுகள்

கடந்த, 2008ல், ஷப்னம் வீட்டில், அவரது பெற்றோர் உட்பட ஏழு பேர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.ஷப்னத்தின் தொண்டையிலும்,கத்தியால் குத்தப்பட்ட காயம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது, அடையாளம் தெரியாத சிலர், வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக, தெரிவித்தார். போலீசார் தீவிரமாக விசாரித்த போது, காதலன் சலீமுடன் சேர்ந்து, வீட்டிலிருந்த ஏழு பேரையும் கத்தியால் குத்தி கொன்றதை ஷப்னம் ஒப்புக் கொண்டார்.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010லும், உச்ச நீதிமன்றம், 2015லும் உறுதி செய்தன.ஷப்னத்தின் கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதையடுத்து, ஷப்னத்துக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியானது.

உத்தர பிரதேசத்தில், மதுராவில் உள்ள சிறையில், பெண்களுக்கு துாக்கு தண்டனையை நிறை வேற்றுவதற்கான தனி அறை உள்ளது. இந்த அறை, 150 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பின், பெண் குற்றவாளி யாரும் துாக்கிலிடப் படவில்லை. மதுராவில் தான், ஷப்னத்துக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

விரைவில் முடிவு

அவருக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான தேதி, விரைவில் முடிவாகும் என, எதிர் பார்க்கப்படுகிறது. 'நிர்பயா' குற்றவாளிகளை துாக்கிலிட்ட, மீரட்டைச் சேர்ந்த பவன் ஜலாட் தான், ஷப்னத்தையும் துாக்கிலிடுவதற்கான பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்துக்கு பின், துாக்கிலிடப்பட்ட முதல் பெண் குற்றவாளியாக ஷப்னம் இருப்பார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024