DINAMALAR
சம்பவம் செய்தி
இந்தியா
கரையான் அரித்த 5 லட்சம் ரூபாய் நோட்டுகள்
Added : பிப் 18, 2021 01:54
விஜயவாடா:ஆந்திராவில், கரையான் அரித்த, 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தை, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு வினியோகித்த வியாபாரியின் செயல், பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, மயிலாவரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர், பிஜிலி ஜமாலைய்யா. இவர், சொந்தமாக வீடு கட்டுவதற்காக, சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார்.வியாபார தொழிலில் கிடைத்த பணத்தை, வங்கியில் முதலீடு செய்யாமல், 500 மற்றும், 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றி, தன் மனைவியிடம் கொடுத்து, வீட்டில் உள்ள மரப் பெட்டியில் சேமித்து வந்தார்.
இந்நிலையில், மரப் பெட்டிக்குள் கரையான் புகுந்து, அதில் இருந்த, 5 லட்சம் ரூபாய் பணத்தை அரித்தது. இதில், மொத்த பணமும் ஆங்காங்கே கிழிந்தும், ஓட்டைகள் விழுந்தும் காணப்பட்டன. இதனால் விரக்தி அடைந்த பிஜிலி, கிழிந்த 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும், தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு வினியோகித்தார்.
குழந்தைகள் கட்டுக்கட்டாக கிழிந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்ததைப் பார்த்த, அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், மொத்த விபரமும் வெளிச்சத்துக்கு வந்தன.'பணத்தை வங்கியில் ஏன் முதலீடு செய்யவில்லை' என, வியாபாரி பிஜிலியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, வங்கியில் கணக்கு துவங்குவது, பணத்தை முதலீடு செய்வது குறித்த நடைமுறைகள் தனக்கு தெரியாததால், வீட்டிலேயே சேமித்து வந்ததாக, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment