லக்னோ :உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 23 பேர், அரசு ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜான்பூர் மாவட்டம் சிக்ரா கிராமத்தில் உள்ள ஒரு வீடு, 'கவர்மென்ட் கர்னா' அதாவது 'அரசு வீடு' என அழைக்கப்படுகிறது.
இந்தக் குடும்பத்தில் உள்ள 50 பேரில் 23 பேர் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களாக இருப்பதே இதற்கு காரணம்.மறைந்த ராம்சரண் யாதவ் என்பவர் இந்தக் குடும்பத்தின் முன்னோடி. இவருக்கு புல்லர், ராம்துலார், சந்திரபாலி என்ற மூன்று மகன்கள். இந்த மூன்று பேரின் மனைவி, குழந்தைகள், பேரக்குழந்தைகள் என தற்போது மொத்தம் 50 பேர் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர். இதில் தற்போது 23 பேர் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். ஏற்கனவே இரண்டு பேர் அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்று விட்டனர்.
இதில் சிவசங்கர் யாதவ் என்பவர் இந்தக் குடும்பத்தின் விவசாய நிலங்களை கவனித்துக் கொள்கிறார். அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் எங்கள் குடும்பத்துக்கு விவசாய நிலம் கிடையாது. அதனால் என் தந்தை தான் முதன் முதலில் அரசுப் பணிக்கு சென்றார்.அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு எங்கள் குடும்பம் முன்னுதாரமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது. எங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்த தலைமுறையிலும் அரசு ஊழியர்கள் உருவாக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment