மருத்துவ கல்லுாரிகள் கட்டுமானம் ஒரு மாதத்தில் முடிக்க உத்தரவு
Added : ஆக 02, 2021 23:53
சென்னை, : முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையை நடத்தும் வகையில், புதிய மருத்துவ கல்லுாரிகளின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, விருதுநகர், நாமக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, அரியலுார் ஆகிய, 11 மாவட்டங்களில், புதிதாக அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனைகள் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. இந்த மருத்துவ கல்லுாரிகள் வாயிலாக, எம்.பி.பி.எஸ்., படிப்பில் புதிதாக, 1,650 இடங்கள் அனுமதிக்கப்படும் .
புதிய மருத்துவ கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது, 11 மருத்துவ கல்லுாரிகளில், 80 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த வேண்டியுள்ளது.உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, புதிய மருத்துவ கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு தேவையான பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவர் விடுதிகள் உள்ளிட்டவற்றை தயார் படுத்தும் பணிகளில், ஒப்பந்த நிறுவனங்கள் கவனம் செலுத்த துவங்கி உள்ளன.
No comments:
Post a Comment