Wednesday, August 4, 2021

திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

Added : ஆக 03, 2021 00:12

சென்னை : திருவள்ளுவர் பல்கலை பதிவாளர், விண்ணப்பங்களை வரவேற்று வெளியிட்ட அறிவிப்பு குறித்து, அரசு பதிலளிக்க உத்தர விட்டு விசாரணையை நாளைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

வேலுார் திருவள்ளுவர் பல்கலையை பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக்கி, டாக்டர் ஜெயலலிதா பல்கலை அமைக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட, இந்தப் பல்கலைக்கு நிதி ஒதுக்கவும், பதிவாளர் நியமிக்கவும் கோரி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், வழக்கு தொடர்ந்தார்.மனுவில், 'விழுப்புரம் மாவட்டம், செம்மேடு கிராமத்தில், பல்கலைக்காக, 70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.தற்போதைய அரசின் புறக்கணிப்பால், பழைய தாலுகா அலுவலகத்தில் பல்கலை இயங்குகிறது. திருவள்ளுவர் பல்கலை பதிவாளர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அதன் முதுகலை மையத்தில் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது, சட்டத்தை மீறியது. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ''சட்டம் அமலுக்கு வந்த பின், திருவள்ளுவர் பல்கலைக்கு விழுப்புரம் மாவட்டத்தில் அதிகார வரம்பு கிடையாது,'' என்றார்.அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''புதிய பல்கலைக்கு துணை வேந்தரும், வாகன ஓட்டுனரும் தான் நியமிக்கப்பட்டுள்ளனர். ''பழைய தாலுகா அலுவலகத்தில் பல்கலை இயங்குகிறது. மாணவர்கள் நலன் கருதி, திருவள்ளுவர் பல்கலை அறிவிப்பு வெளியிட்டது,'' என்றார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி, 'சட்டம் அமலில் இருக்கும் போது, அதற்கு எதிராக எப்படி செயல்பட முடியும்' என, கேள்வி எழுப்பினார். அரசிடம் உரிய தகவல் பெற்று தெரிவிப்பதாக, அட்வகேட் ஜெனரல் கூறவே, விசாரணையை 4ம் தேதிக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024