வேரை விட்டுவிட்டுக் கிளையை வெட்டுவதேன்?
டெல்லியில் டாக்ஸி ஓட்டுநரால் பெண்ணொருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான சில கேள்விகளை எழுப்புகிறது.
தேசத்தின் உச்சபட்சப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தலைநகரிலேயே இப்படியென்றால், மற்ற நகரங்களைப் பற்றி என்ன சொல்வது? அந்த டாக்ஸி ஓட்டுநர் ஏற்கெனவே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறை சென்று வந்திருக்கிறார் என்ற தகவலும், பாலியல் அத்துமீறல்களில் வழக்கமாக ஈடுபடக் கூடியவர்தான் அவர் என்பதும் மேலும் அதிர வைக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஒரு நபர், எப்படி இவ்வளவு சுதந்திரமாகத் திரிய முடிந்தது என்பது புதிர். அவருக்கு வேலை அளித்த உபேர் நிறுவனம், இது போன்ற பின்னணித் தகவல்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டது இன்னும் அதிர்ச்சியளிக்கிறது. வேலைக்குச் சேர அந்த ஓட்டுநர் போலியாக நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல, உபேர் நிறுவனத்தில் ஓட்டுநர்களாக இருக்கும் 4,000 பேரின் பின்னணித் தகவல்கள் பற்றியும் முறையான ஆவணங்கள் அந்த நிறுவனத்திடம் இல்லை என்பதுதான் விசித்திரம். யார் வேண்டு மானாலும் எந்தக் குற்றத்தை வேண்டுமானாலும் செய்துவிட்டு, அது பற்றித் தெரிவிக்காமல் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர முடியும் என்ற நிலை எதன் அடையாளம்?
பாலியல் வன்முறைச் சம்பவம் வெளியில் தெரிந்தவுடன், உபேர் டாக்ஸியை டெல்லியில் தடைசெய்திருக்கிறார்கள். 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் உபேர் டாக்ஸியின் செயல்பாடுகள் பல முறை கேள்விக்குள்ளாகியிருக்கின்றன. மற்ற டாக்ஸிகளை விட குறைந்த கட்டணம் என்பதால், அந்தத் துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி ஏகபோகமாகத் தொழில் நடத்து வதாகவும் இந்தியா உட்படப் பல நாடுகளில் அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் இதுபோன்ற சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது.
அது மட்டுமல்லாமல், இந்த நிறுவனம் ஒரு கைபேசி ‘ஆப்’ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. டாக்ஸியை வரவழைப்பதிலிருந்து பயணக் கட்டணத்தைச் செலுத்துவது வரை அவர்கள் செயல்படுத்தும் ‘ஆப்’ மூலமாகச் செய்ய முடியும். ஒருவர் இதில் கணக்கு தொடங்கி விட்டால், இந்த ‘ஆப்’ மூலமாக அமெரிக்க டாலராகத்தான் கட்டணம் செலுத்த முடியும். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒருவர், இந்தியப் பணத்தைக் கட்டணமாகச் செலுத்துவதுதானே முறையாக இருக்க முடியும்.
பிரச்சினையின் வேரைக் களையாமல் அதன் கிளையை மட்டும் வெட்டுவது எந்த விதத்தில் பலன் கொடுக்கும்? அந்த நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை தவறு என்பதல்ல இங்கே பிரச்சினை. அந்த நிறுவனம் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதை இவ்வளவு நாட்கள் கழித்துதான், அதுவும் ஒரு பெண் மீது கொடுமையாகப் பாலியல் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பிறகுதான், கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது என்பதுதான் பிரச்சினை. உண்மையில் ஒரு தவறு நடக்கும்போதுதான் தெரிகிறது, நம்முடைய அமைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும் நிறைந்து கிடக்கும் தவறுகள். அரசு தவறுகளை மறைப்பதை விட்டுவிட்டு, அமைப்பைத் திருத்த முயற்சிக்க வேண்டும்!