Wednesday, December 10, 2014

அரபு நாடுகளோடு பரஸ்பர வர்த்தகம்

தினத்தந்தி’ தனது முதல் சர்வதேச பதிப்பாக 17–வது பதிப்பை துபாயில் இன்று தொடங்குகிறது. அமீரகம் என்று அழைக்கப்படும் அரபு ஐக்கிய குடியரசு நாடுகளில் தொடங்கப்படும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை ‘தினத்தந்தி’ பெற்றுள்ளது.

வளைகுடா கடலோரம் உள்ள அரபு நாடுகள், இந்தியாவைப்போல நீண்டநெடிய சரித்திரம் படைத்தது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு எப்போதும் உண்டு. சுதந்திரம்பெற்ற பிறகுதான் 1971–ம் ஆண்டில் துபாய், அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், பஜைரா போன்ற நாடுகள் ஒன்றாக இணைந்து, ஐக்கிய அரபு குடியரசாக உருவெடுத்தது. பின்பு ரஸ் அல் கைமா நாடும் இணைந்துகொண்டது. 1962–ம் ஆண்டுதான் முதலில் அபுதாபியில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டது. அதில் இருந்து அரபு நாடுகளின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. துபாய் ஆட்சியாளராக இருந்த ஷேக் ரஷீது பின் சைது அல் மக்தும் விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வம் உடையவர். மறைந்த ‘தினத்தந்தி’ அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தார். அப்போது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கூட்டத்தில் கபடி விளையாட்டை, 1990–ம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்க்க வேண்டும் என்று முயற்சித்தபோது, அதற்கு முழுமையாக ஆதரவாக இருந்தவர் அவர்தான். ஆனால், பெய்ஜிங்கில் ஆசிய விளையாட்டுப்போட்டி நடந்த போது அவர் உயிரோடு இல்லை. அவரது மகன் ஷேக் மக்தும் பின் ரஷித் அல் மக்தும் துபாய் ஆட்சியாளராக இருந்த நிலையில் பெய்ஜிங் வந்தார். அவரை, பா.சிவந்தி ஆதித்தனார் கபடி போட்டி நடந்த இடத்துக்கு அழைத்துச்சென்று கபடி விளையாட்டை விளக்கினார். அவரும் 2006–ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற நேரத்தில் காலமானதும், அவருடைய சகோதரரான இப்போது துபாய் ஆட்சியாளராகவும், ஐக்கிய அரபு குடியரசின் துணை ஜனாதிபதியாக இருக்கும் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தும் பதவியேற்றார்.

இன்றைய சூழ்நிலையில், அடுத்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அரபு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக வர இருக்கிறார். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவை மேம்படுத்துவதுடன், பரஸ்பர வர்த்தக உறவையும் நிச்சயமாக வளர்க்கும். இந்தியாவில் இருந்து பல அறிவுசார் தொழில் முதலீட்டாளர்கள் அரபு நாடுகளில் தொழில் தொடங்க முனைப்புடன் இருக்கிறார்கள். குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் இந்திய தொழில் அதிபர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதுபோல, அரபு நாட்டில் உள்ள தொழில் அதிபர்கள், இந்தியாவில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய பணிகள் நடந்துவருகின்றன. இதுதொடர்பாக இந்திய, அரபு கூட்டு மாநாடு கடந்த மாதம் 26, 27–ந் தேதிகளில் டெல்லியில் நடந்தது. ஏற்கனவே இந்த ஆண்டு இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் உள்பட உயர்நிலை கூட்டங்கள் நடந்துள்ளன. அவையெல்லாம் நல்ல உறவு பாலங்களை வலுவடைய செய்து, தொழில் முதலீடுகளுக்கும் வழிகாட்டியுள்ளன.

இந்தியாவில் இருந்து 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அரபு நாடுகளில் பல்வேறு பணிகளில் இருக்கிறார்கள். இதில் கணிசமான அளவில் தமிழ்நாட்டில் இருந்தும், தென்மாநிலங்களில் இருந்தும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சின்னஞ்சிறு குக்கிராமங்களில்கூட இன்னார் குடும்பத்தில் இருந்து ஒருவர் அரபு நாடுகளில் பணியாற்றுகிறார் என்றால் தனி மவுசு உண்டு. தற்போது உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையத்தை துபாயில் கட்ட திட்டம் உள்ளது. விரைவில் ரூ.2 லட்சம் கோடி செலவிலான 5 ரன்வேக்கள் ஒரே நேரத்தில் இயங்கும் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்க இருக்கிறது. இன்னும் நிறையபேர் தமிழ்நாட்டில் இருந்து வேலைக்கு செல்வார்கள். கடும் உழைப்புக்கு இந்த தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்ற இந்திய அரசாங்கத்தின் கோரிக்கையை, அரபு நாடுகள் ஏற்க வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024