Saturday, December 13, 2014

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கிய ரூ.4,479 கோடி கருப்பு பண பட்டியல்: முதல்முறையாக மத்திய அரசு வெளியீடு


சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், இந்தியர்கள் பலரும் உண்மையான வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து, கருப்பு பணத்தை பதுக்கி உள்ளனர்.

கருப்பு பண மீட்பு நடவடிக்கை

இந்த கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய சட்ட மந்திரியும், மூத்த வக்கீலுமான ராம் ஜெத்மலானி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இதில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.பி. ஷாவை தலைவராகவும், மற்றொரு முன்னாள் நீதிபதி அரிஜித் பசாயத்தை துணைத்தலைவராகவும், 11 பேரை உறுப்பினர்களாகவும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழு தனது பணிகளை தொடங்கி உள்ளது.

628 பேர் பட்டியல்

இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, வெளிநாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரை கொண்ட பட்டியலை மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி தாக்கல் செய்தது. பிரான்சு அரசிடமிருந்து பெற்ற அந்த பட்டியலை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், அப்படியே சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் இந்த கணக்குகளில் 289 கணக்குகளில் பணம் எதுவும் இல்லை என்பதை கண்டறிந்து, சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்தது.

427 பேர் மீது நடவடிக்கை

இந்த நிலையில் கருப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ள 628 பேரில் (இவர்களின் பெயர் விவரங்களை அரசு தெரிவிக்கவில்லை) 201 பேர் இந்தியாவில் வாழ்கிறவர்கள் அல்ல அல்லது அவர்கள் கண்டுபிடிக்க முடியாதவர்கள். 427 பேர் மீதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

மொத்த தொகை

இந்த 628 கணக்குகளில் தொடர்புடைய தொகை சுமார் ரூ.4 ஆயிரத்து 479 கோடி. (இந்த தகவல் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.)

இதில் 79 பேரின் கணக்கு களை வருமான வரித்துறை அளவிட்டுள்ளது. இவர்களின் தெரிவிக்கப்படாத கணக்கு இருப்பு தொகையின் மீது ரூ.2 ஆயிரத்து 926 கோடி வரியாக வட்டியுடன் பெறப்பட்டுள்ளது.

அபராத நடவடிக்கை

46 கணக்குகள் தொடர்பாக அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இதில் 3 கணக்குகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேண்டுமென்றே வரி ஏய்க்கும் நோக்கத்தில் செயல்பட்ட 6 கணக்குகளில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 கணக்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

மற்றவைகளில், தேவையான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படுகின்றன. வரும் மாதங்களில் அவற்றில் கூடுதலான முன்னேற்றம் ஏற்படும்.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பை பொறுத்தமட்டில், ஒரு இரும்பு தாது ஏற்றுமதி நிறுவனம் உள்பட 31 கணக்குகளில் உண்மையான மதிப்பு குறைத்து காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் சேகரித்துள்ளது.

அவர்களில் 11 பேர் மதிப்பை குறைத்து காட்டியதை ஒப்புக்கொண்டு, ரூ116.73 கோடி அபராதம் செலுத்தி விட்டனர். மற்றவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.

சொத்துகள் முடக்கம்

ஒடிசாவில் சுரங்க தொழில் அதிபர்கள் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக ரூ.400 கோடி சொத்துகளை மத்திய அமலாக் கப்பிரிவு முடக்கி வருகிறது.

கர்நாடகத்தில் 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, ரூ.995.97 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

ஜார்கண்டில் ரூ.452.43 கோடி சொத்துகளை முடக்க தற்காலிக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கர்நாடகத்தில் ரூ.884.13 கோடி சொத்துகளும், ஆந்திராவில் ரூ.1,093.10 கோடி சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அருண் ஜெட்லி தகவல்

இதற்கிடையே டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், “எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் தொடர்பான நடவடிக்கைகள் மார்ச் 31-ந் தேதிக்குள் முடியும்” என குறிப்பிட்டார்.

உள்நாட்டில் உள்ள கருப்பு பணம்

சுப்ரீம் கோர்ட்டில், சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்த அறிக்கையில், உள்நாட்டில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.14 ஆயிரத்து 958 கோடி கண்டறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மேலும், கருப்பு பண விவகாரத்தில், சிறப்பு புலனாய்வு குழு 13 சிபாரிசுகளை செய்துள்ளது. அவை வருமாறு:-

வெளிநாடுகளில் யாராவது சட்டவிரோத சொத்துகள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு ஈடான அவர்களின் உள்நாட்டு சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக ‘பெமா’ சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ரூ.50 லட்சத்துக்கு மேல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது ‘சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை’ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பான் நம்பர்

கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காக, கையிருப்பில் வைத்துக்கொள்வதற்கும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கும் பணத்துக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். அந்த உச்சவரம்புக்கு மேல், பணத்தை எடுத்துச் சென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது.

ரூ.1 லட்சத்துக்கு மேல், ரொக்கமாகவோ, காசோலை மூலமாகவோ பணம் செலுத்தினால், அதற்கு ‘பான்’ நம்பரை குறிப்பிடுவதை கட்டாயமாக்க வேண்டும். குஜராத்திலும், மராட்டியத்திலும், பணம் எடுத்துச் செல்லும் கூரியர்களாக அங்காடியாக்கள் என்பவர்கள் செயல்படுகிறார்கள். கருப்பு பண பரிவர்த்தனையில் அவர்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

விரைவில் அமல்

மேலும், சுரங்கம், நிதி திட்டங்கள், இரும்பு தாது ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்கள், கருப்பு பண பரிவர்த்தனை அதிகமாக நடக்கும் தொழில்களாக உள்ளன. நாங்கள் கூறிய நடவடிக்கைகள் மூலம், கணக்கில் காட்டப்படாத பணத்தை வைத்திருப்பதையும், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதையும் பெருமளவில¢ தடுக்கலாம். இந்த யோசனைகள் தற்போது பரிசீலனையில் உள்ளன. விரைவில் இவை அமல்படுத்தப்படலாம்.

நிலுவையில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருமானவரி வழக்குகளை விசாரிக்க மும்பையில் கூடுதலாக ஐந்து தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகள் அமைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சிறப்பு புலனாய்வு குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024