Saturday, December 13, 2014

அடுத்த நூற்றாண்டில், காளை மாடுகள் அருங்காட்சியகங்களில் பார்க்கும் விலங்காக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

கடந்து போகும் காளைகள்


நிகழாண்டில் பழனியில் முடிவடைந்த காளை மாடுகளுக்கான சந்தையில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பங்கேற்கவில்லை.

இயந்திரப் பயன்பாடு அதிகரித்து வருவதால் மாடுகளை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சந்தைகளும் களை இழந்து விட்டன.

காளை மாடுகளுக்கு என்றுமே தனி மரியாதை உண்டு. டெல்டா பகுதிகளின் உயிர்நாடியான விவசாய வேலைகளுக்கு தோள் கொடுத்தவை இக்காளைகளே. 100 குழி அளவுள்ள நிலத்தை உழுவதற்கு அரை நாள் தேவைப்படும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஒரு நாள் ஆகும்.

அந்த நேரத்தில், வெயிலையும் பொருள்படுத்தாமல் உழைக்கும் வல்லமை பெற்றவை காளைகள். விவசாயப் பகுதிகளில் செய்யப்படும் உழவு, அறுவடை, மூட்டைகளை சுமத்தல், நீண்ட தூரப் பயணம் உள்ளிட்ட வேலைகளைச் சலிக்காமல் செய்யக்கூடிய திறன் பெற்றவை.

எனவேதான், மாடுகளை கவுரவிக்க கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கல் டெல்டா மாவட்டங்களில் விமரிசையாக இருக்கும். பசு மாடுகளை பொருத்தவரை வீடுகளிலேயே மாலை அணிவித்து பொங்கல் கொண்டாடி விடுவர்.

ஆனால், காளை மாடுகளுக்கு கிராமத்தின் பொதுவான இடத்தில் வைத்து பொங்கல் கொண்டாடப்படும். அதாவது, ஊரில் காளை வைத்துள்ள அனைவரும் தங்களது மாடுகளை கோயிலுக்கு கூட்டி வருவர்.

அங்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து பூஜைகள் செய்யப்படும். பின்னர் மாடுகள் அவிழ்த்து விடப்படும்.

தை மாதம் என்பதால் பயிர்கள் அனைத்தும் அறுவடை நிலையில் இருக்கும். யாரும் மாடுகளை அவிழ்த்து விடக்கூடாது என்ற விதிமுறை கிராமங்களில் இருக்கும். என்றாலும் அன்றைய தினம் மட்டும் கட்டுப்பாடு தளர்த்தப்படும்.

ஏனெனில், சில ஊர்களில் கோயில்கள் வயல்களின் ஓரத்தில் இருக்கும். மாடுகள் கொஞ்சம் திரும்பினாலே வயல்களுக்கு செல்லும் நிலையில் இருக்கும். ஆகவே, அன்று யாரும் மாடுகளை அடிக்காமல் பத்திரமாக வயல்களை விட்டு வெளியேற்ற வேண்டும்.

காளைகள் பாய்ந்துச் சென்று தங்களின் முதலாளியின் வீட்டு வாசலில் சரியாக நிற்கும். அங்கே வீட்டுப் பெண்களால் ஆரத்தி எடுக்கப்பட்டு, திலகமிடப்பட்டு அதற்குரிய இடத்தில் கட்டப்படும். காலம் காலமாக நடந்து வந்த நிகழ்வு இது.

அப்போதெல்லாம் மாட்டுப் பொங்கல் நாளில் மாலையில் கிராமப்புறங்களில் உள்ள கோயில்களிலோ அல்லது பெரும் திடலிலோ காளை மாடுகள் அணிவகுத்து நிற்கும்.

தங்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக விளங்கிய காளைகளை கவுரவிப்பதில் விவசாயிகள் அதிக அக்கறை காட்டினர்.

அதன்பிறகு காளைகளின் பயன்பாடு குறைய ஆரம்பித்து, இயந்திரப் பயன்பாடு தலை தூக்க ஆரம்பித்தது. மாட்டுப் பொங்கலுக்கு வரும் மாடுகளின் எண்ணிக்கையும் மெல்ல குறைய ஆரம்பித்தது.

தற்போது மக்கள் மட்டுமே கோயிலுக்கு வந்து பொங்கலிட்டு வீடுகளுக்கு வெறுமையாக செல்கின்றனர்.

தற்போது உள்ள சிறுவர்கள் இந்த நிகழ்வுகளை பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே.

தற்போது இனவிருத்திக்காக கிடை போடுவோர் சிலர் காளை மாடுகளை வளர்த்து வருகின்றனர். உழவுக்காக காளைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டது.

தனக்கு உதவிய தோழனை கடைசி வரை வைத்து பராமரிக்கும் எண்ணமும் மக்களிடையே குறைந்து விட்டது. அதனாலேயே பல இடங்களில் காளைகள் அடிமாட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தாய் - தந்தையரே முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படும் காலத்தில் வாழுகின்ற நாம், மாடுகளின் மீது கருணை காட்டுவோரை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

கட்டை வண்டி, டயர் வண்டி, கூண்டு வண்டி இவையெல்லாம் மாடுகள் இழுத்த வாகனங்கள். வசதியானவர்கள் வைத்திருந்த கூண்டு வண்டிகள் ஏறக்குறைய மறைந்துவிட்டது.

கிராமிய திரைப்படங்களில் மட்டுமே காண முடிகிறது. கட்டை வண்டிகளும், டயர் வண்டிகளும் ஒரு சில இடங்களில் பயன்பாட்டில் உள்ளன.

இனி வரும் தலைமுறையினர் உழவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட காளைகளை ஆச்சர்யத்தோடு பார்க்கும் நிலைமை வரலாம். காளைகளின் குளம்படி ஓசைகளும் கழுத்து மணி ஓசைகளும் கிராமப்புறங்களிலிருந்து மெல்ல மறைந்து வருகின்றன.

அடுத்த நூற்றாண்டில், காளை மாடுகள் அருங்காட்சியகங்களில் பார்க்கும் விலங்காக மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024